பால் உற்பத்தியாளர் ஊக்கத்தொகை தீபாவளிக்குள் வழங்க வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர் ஊக்கத்தொகை தீபாவளிக்குள் வழங்க வலியுறுத்தல்
ADDED : அக் 26, 2024 07:05 AM
பெரம்பலுார்: பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை 100 கோடி ரூபாயை தீபாவளிக்குள் வழங்க உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பெரம்பலுார் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற சங்க மாநில தலைவர் முகமது அலி கூறியதாவது:
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை 100 கோடி ரூபாயை தீபாவளிக்குள் வழங்க வேண்டும்; பெரம்பலுார் மாவட்டத்தில், நான்கு மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள ஊக்கத்தொகை மற்றும் போனஸ் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடை தீவனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பசும்பால் 1 லிட்டருக்கு, 45 ரூபாய், எருமை பால் 1 லிட்டருக்கு, 54 ரூபாய் என கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
தரமான கால்நடை தீவனங்களை தமிழக அரசு, 50 சதவீத மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆவின் பால் விற்பனை விலையில், 1 லிட்டருக்கு 3 ரூபாயை, 2021ல் தமிழக அரசு குறைத்ததால், ஆவினுக்கு இதுவரை ஏற்பட்ட நஷ்டத்தொகை, 900 கோடி ரூபாயை அரசு வழங்கி ஈடு செய்ய வேண்டும்.
வேளாண் பொருட்களுக்கு கொள்முதல் விலை அறிவிப்பது போல பாலுக்கும் ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கோரிக்கைகளை தீபாவளிக்குள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.