9 முதல் 15 வயது வளரிளம் பெண்களுக்கு கர்ப்பவாய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
9 முதல் 15 வயது வளரிளம் பெண்களுக்கு கர்ப்பவாய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
ADDED : ஜன 20, 2025 12:26 AM

கம்பம் : மத்திய சுகாதார அமைச்சகம் 9 முதல் 15 வயதுள்ள வளரிளம் பெண்களுக்கு கர்ப்பவாய் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ள நிலையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அப்பணிகளை துவக்க தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன் மத்திய அரசு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொற்றா நோய் பிரிவில் கர்ப்ப வாய் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. மேலும் கர்ப்ப வாய், மார்பகம், பிற புற்றுநோய் பரிசோதனைகளையும் செய்ய நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் 35 முதல் 45 வயதுடைய பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், சமீப காலங்களில் அரசு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனைகள் செய்வது குறைந்து வருகிறது.
2023ல் தமிழகத்தில் 8 ஆயிரத்து 534 பேர்களுக்கு கர்ப்ப வாய் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. 2030 க்குள் 15 வயது பெண் குழந்தைகள் 90 சதவீதம் பேர்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த உலக சுகாதார நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுக்கப்படாமல் இருந்தது. தற்போது தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் தற்போது கர்ப்ப வாய் புற்றுநோய் பாசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் தீவிரப்படுத்தவும், 16 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி தற்போதைய வழிகாட்டுதல் நடைமுறைகளின் படி 9 முதல் 16 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பெண்களுக்கு செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்று 'டோஸ்'களாக செலுத்த வேண்டும். முதல் தடுப்பூசி செலுத்திய பின், 45 நாட்கள் கழித்து 2வது டோஸ், பின் 6 மாதங்கள் கழிந்த பின் மூன்றாவது 'டோஸ்' செலுத்த வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள், 'கிளினிக்'குகளில் தற்போது இந்த வகை தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. ஒவ்வொரு 'டோஸ்' செலுத்த ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கின்றனர். அரசு மருத்துவமனை, நகர்நல நல்வாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை தேவை என்றனர்.