அமெரிக்க அரசின் வரிவிதிப்பு செப்., 5ல் கம்யூ., ஆர்ப்பாட்டம்
அமெரிக்க அரசின் வரிவிதிப்பு செப்., 5ல் கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 28, 2025 01:25 AM
சென்னை:அமெரிக்க அரசின் வரி விதிப்பை கண்டித்து, தமிழகத்தின், 13 தொழில் நகரங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில், செப்., 5ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கை:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாளிலிருந்து, இந்தியா மீதான வெறுப்பை உமிழ்ந்து வருகிறார்.
இந்தியர்களின் விசாவை காரணமாக்கி, அவர்களை போர் கைதிகளை போல், கைகளில் விலங்கு போட்டு, திருப்பி அனுப்பி அவமதித்தார். நாட்டின் எரிபொருள் தேவைக்காக, ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு, கச்சா எண்ணெய் வாங்கி வருவதை, இந்தியா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என, டிரம்ப் அரசு மிரட்டி நிர்பந்தித்து வந்தது.
புதிய வரி விதிப்பால், ஜவுளி, பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், இறால், தோல் பொருட்கள், மின்சார இயந்திர சாதனங்கள் என, பல பிரிவுகளில் உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்படும்.
ஏற்றுமதியில் 66 சதவீதம் வீழ்ச்சி ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 4,820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஏற்றுமதியை சார்ந்துள்ள தொழில்களில், 70 சதவீதம் உற்பத்தியை வெட்டி குறைக்க வேண்டும் என்பதால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறி போகும் அபாயம் உள்ளது.
அமெரிக்க அரசின் வரிவிதிப்புக் கொள்கையை கண்டித்து, சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், வேலுார், மதுரை, திருச்சி, விருதுநகர், துாத்துக்குடி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் செப்., 5ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

