ADDED : ஆக 28, 2025 01:24 AM
முதல்வர் ஸ்டாலினின் பீஹார் பயணத்தை கிண்டல் செய்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமூக வலைதளத்தில், ஹிந்தி மொழிபெயர்ப்புடன் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், ஸ்டாலின் மற்றும் தி.மு.க., முக்கிய பிரமுகர்கள், இதற்கு முன், பீஹார் மக்களை பற்றி பேசிய வீடியோக்களின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.
'ஹிந்தி பேசுவோரை, தமிழகத்துக்கு வேலைக்கு அழைத்து வந்து, பா.ஜ.,வை வளர்க்க பார்க்கின்றனர்; ஹிந்தி படிச்சா கக்கூஸ் தான் கழுவணும்; பான் பராக் விக்கிறானுங்க; வட மாநிலக்காரனுங்களுக்கு அறிவே இல்லை, முட்டாள்கள்' என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் பேசியதையே ஹிந்தியில் மொழி பெயர்த்து பதிவிட்டுள்ளார்.
மேலும், 'பீஹாரில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சி தலைவர்கள், பீஹாரிகளை பற்றி பேசிய அநாகரிக பேச்சுகளை இணைத்துள்ளேன். அவற்றை, அம்மாநில மக்கள் மத்தியில், மீண்டும் பெருமையுடன் ஸ்டாலின் பேச வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோல, வாரிசு அரசியலை கிண்டல் செய்யும் வகையில், ஸ்டாலின், ராகுல், தேஜஸ்வி ஆகிய மூவரின் படத்தையும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

