ADDED : பிப் 06, 2025 09:42 PM
சென்னை:ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, முதன்மைச் செயலர் துரைஆகியோர், டில்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, திருச்சியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
திருச்சியில் உள்ள ஜி கார்னர் சாலை இரு வழிப்பாதையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கனரக வாகனங்களும், பஸ்களும் உள்ளே வரும் நுழைவுப் பகுதியாகவும் இருப்பதால், தொடர்ந்து விபத்துக்கள் நடக்கும் கருப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிற இச்சாலையில், ஜி கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது, திருச்சி மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கை. அதை நிறைவேற்றக் கோரி, நிதின் கட்கரியை சந்தித்து, எம்.பி.,க்களான வைகோவும், துரையும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து, துரை கூறுகையில், ''சுரங்கப்பாதை திட்டம் தயாரிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை துவங்க வேண்டும் என, கட்கரியிடம் கேட்டுக் கொண்டோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். திருச்சி ஜி கார்னர் பகுதியில், வாகன சுரங்கப்பாதை கட்டப்பட்டு, அது விபத்தில்லா பகுதியாக மாறி, மக்கள் பாதுகாப்புடன் பயணிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை,'' என்றார்.

