தி.மு.க.,வின் அரணாக ம.தி.மு.க., விளங்கும் திரும்ப திரும்ப சொல்கிறார் வைகோ
தி.மு.க.,வின் அரணாக ம.தி.மு.க., விளங்கும் திரும்ப திரும்ப சொல்கிறார் வைகோ
ADDED : ஜூலை 09, 2025 08:10 AM
மதுரை : சில நாட்களாக நடந்து வரும் ம.தி.மு.க., நிர்வாகிகள்  கூட்டங்களில், 'மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் தி.மு.க..விற்கு உறுதுணையாக இருக்கிறோம்; இந்த அரசிற்கு எதிராக எந்த போராட்டங்களையும் எங்கள் கட்சி நடத்தியதில்லை' எனக்கூறிவரும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நேற்று மதுரையிலும், ''தி.மு.க.,வின் சோதனையான காலக்கட்டத்தில் ம.தி.மு.க., அரணாக விளங்கும்,'' என தெரிவித்தார்.
ம.தி.மு.க., மண்டல நிர்வாகிகள் கூட்டம் வைகோ தலைமையில் நேற்று மதுரை தெப்பகுளத்தில் நடந்தது. பொருளாளர் செந்திலதிபன், முதன்மை செயலாளர் துரை, துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
பின் வைகோ அளித்த பேட்டி: தி.மு.க., வுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் தற்போது வரை ஒற்றுமையாக இருந்து வருகிறோம். தி.மு.க., வின் சோதனையான காலக்கட்டத்தில் ம.தி.மு.க., அரணாக விளங்கும். வரும் சட்டசபை தேர்தலிலும் திராவிட இயக்கத்தை காக்க தி.மு.க.,வுக்கு பக்க பலமாக ம.தி.மு.க., செயல்படும்.
விளம்பரம் செய்ய எங்களிடம் பணம் இல்லை. அதனால் இருட்டடிப்புக்கு ஆளாகிறோம். திருச்சி மாநாட்டிற்கு பிறகு மேலும் ஆதரவு திரட்டிக் கொள்வோம். தமிழகத்தில் ம.தி.மு.க., தவிர்க்க முடியாத கட்சி என்ற நிலை தற்போது உள்ளது. தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதனால் கூடுதல் தொகுதிகளை கேட்போம். ம.தி.மு.க., 12 தொகுதிகள் வேண்டும் என எப்போதும் கேட்கவில்லை. த.வெ.க., தலைவர் விஜய் தன் கருத்துக்களை கூறுகிறார். அவரது கருத்துக்கு பதில் சொல்ல முடியாது என்றார்.
துரை பேசியதாவது: பார்லிமென்டில் நமக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட போது சங்கடம் ஏற்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் கடும் போட்டி நிலவும். ம.தி.மு.க., தான் அதில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் என்றார்.

