போதைப்பொருளை தடுக்க தனிச்சட்டம்: வைகோ வலியுறுத்தல்
போதைப்பொருளை தடுக்க தனிச்சட்டம்: வைகோ வலியுறுத்தல்
ADDED : நவ 22, 2025 07:32 AM

கடலுார்: போதைப்பொருளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
மதுரையில் இருந்து கூடலுார் வரை மூன்று முறை நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். பள்ளி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், மார்க்கெட்டுக்கு சென்ற தாய்மார்கள் வீடு திரும்புவார்களா என்ற பய உணர்வு பெண்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் போதைப்பொருள். பள்ளி மற்றும் கல்லுாரிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையாகி வருகிறது. போதைப் பொருளின் விளைவுதான் கோவையில் இளம்பெண், 4 மிருகங்களால் நாசமாக்கப்பட்டுள்ளார். இதனை தடுக்க வலியுறுத்தி இந்த சமத்துவ நடை பயணத்தை மேற்கொண்டு உள்ளேன்.
தமிழக முதல்வரிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் போதை பொருளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வாருங்கள். போதை பொருள் கஞ்சா வைத்திருந்தால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை, பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும்.
எங்கள் நடைபயணத்தில் இரவு நேரங்களில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 11 திரைப்படங்கள் திரையிடுவதற்கு முடிவு செய்துள்ளேன். இந்த திரைப்படங்கள் சொல்லும் கருத்துக்கள் மூலம் இளைஞர்களை ஊக்குவிப்பேன். நடை பயணத்தில் 4 டாக்டர்கள் ,2 வேன்களில் மருந்து பொருட்கள், 2 லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த நடை பயணத்தில் 600 பேர் பங்கேற்கின்றனர். நடைப்பயணத்தை துவக்கி வைப்பது முதல்வர் ஸ்டாலின்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

