ADDED : நவ 13, 2025 01:57 AM

சென்னை: சென்னை அறிவாலயத்தில், நேற்று, முதல்வர் ஸ்டாலினை ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சந்தித்தார்.
பின், அவரது பேட்டி:
ஜன., 2ம் தேதி, திருச்சி உழவர் சந்தையில் இருந்து, என் தலைமையில் நடக்க உள்ள, சமத்துவ நடை பயணத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இப்பயணத்தில், 300 பேர் நடக்கவுள்ளனர்.
நெல்லையிலிருந்து வரும் 16ம் தேதி முதல், எட்டு மண்டலங்களுக்கு சென்று, நானே நேர்காணல் செய்து, 300 பேரை தேர்வு செய்கிறேன். ஜன., 12ம் தேதி மதுரையில் நடைபயணத்தை நிறைவு செய்கிறோம்.
நடைபயணத்தின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசுகின்றனர்.
கோவையில் மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம் போல பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள், இனிமேல் நடக்காமல் இருக்க, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் நடைபயணத்தின் நோக்கம். என் அரசியல் வாழ்க்கையில், இது ஒன்பதாவது நடைபயணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

