வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தி.மு.க., நாடகம் ஆடுகிறது: சீமான்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தி.மு.க., நாடகம் ஆடுகிறது: சீமான்
ADDED : நவ 13, 2025 01:58 AM
சென்னை: சென்னையில், பல்கலை ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்திற்கு நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆதரவு தெரிவித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 2008ல் செயல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு, பேராசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் பல்கலை சட்டம் திரும்ப பெறப்பட்டது.
அன்றைய நிலைப்பாடு நியாயமானது என்றால், இன்றும் அதே நிலைப்பாட்டில், இச்சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். மாறாக மீண்டும் செயல்படுத்த முனைவது, ஆட்சி அதிகாரத்தின் திமிர்.
அரசு திரும்ப பெறாவிட்டால், நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை செய்வோர், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டவர்களா அல்லது அரசால் நியமிக்கப்பட்டவர்களா. திருத்தப் பணி வேண்டாமென்றால், எதற்கு ஓட்டுச்சாவடி அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
இப்பணியை தேர்தல் கமிஷன்தான் செய்கிறது என்பதை நம்ப முடியுமா? தேர்தல் அறிவிக்கும்போது தான், ஆட்சி அதிகாரம் கட்டுப்பாடு, தேர்தல் கமிஷனிடம் செல்லும்.
இப்போது யாரிடம் உள்ளது. இந்த சிறப்பு திருத்த பணிகளுக்காக, பணியாளர்களை நியமித்துவிட்டு, பின் ஏன் எதிர்ப்பதாக தி.மு.க., நாடகம் ஆடுகிறது.
எதிர்த்தால், எந்த பணியையும் செய்யாமல், அமைச்சரவையை கூட்டி, அவசர சட்டத்தை இயற்ற வேண்டியது தானே. இன்னும் எத்தனை ஆண்டுகள், இதுபோன்ற நாடகத்தை நடத்தப் போகின்றனர்.
அன்று வாக்காளர்கள், ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இன்று யார் தங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை, ஆட்சியாளர்கள் முடிவு செய்கின்றனர்.
டில்லியில் குண்டு வெடிப்பு , பீஹார் தேர்தலுக்கு முன் நடந்து இருப்பதால், அங்கு, கூடுதல் ஓட்டுகள் பெற முடிந்தது. த.வெ.க., தலைவர் விஜய், கடந்த ஆண்டுகளில், எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு அண்ணனை மறந்து விட்டார். மனிதனுக்கு மறதியும் உண்டுதானே.
இவ்வாறு அவர் கூறினார்.

