துப்பாக்கி சூடு : நீதி விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்
துப்பாக்கி சூடு : நீதி விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்
ADDED : செப் 12, 2011 02:23 AM
மதுரை : மதுரை, பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக ஐகோர்ட் நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தினார்.
இரு ஊர்களில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவங்களில் காயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர் கூறியதாவது: மதுரை சிந்தாமணி ரிங்ரோடு அருகே நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். பரமக்குடியில் ஐந்து பேர் இறந்துள்ளனர். ஐகோர்ட் நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். தென் மாவட்டங்களில் சமூக ஒற்றுமையை பாதுகாக்க, அனைவரும் அமைதி காக்க வேண்டும். இறந்தவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். மதுரையில் சிகிச்சை பெறுவோருக்கு போதிய இட வசதி இல்லை. தகுந்த வசதிகளை செய்ய வேண்டும், என்றார்.