ADDED : ஜூலை 12, 2025 03:05 AM
சென்னை: வைகோ நன்றி மறந்தவர் என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்தார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடந்த, ம.தி.மு.க., கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, 'கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது, திருச்சி தி.மு.க., மாநாட்டிற்குச் செல்லாமல், போயஸ் கார்டன் சென்று, ஜெயலலிதாவை சந்தித்தது, அரசியல் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு' என, கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:
கடந்த 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க.,வுக்கு, மூன்று எம்.பி.,க்கள் கிடைத்தனர். அதற்கு முன், ம.தி.மு.க.,வுக்கு எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கிடையாது.
ம.தி.மு.க.,வுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்ததற்கே, ஜெயலலிதாதான் காரணம். இந்த நன்றியை மறந்து விட்டு, கொஞ்சம்கூட வாய் கூசாமல் வைகோ பேசுவது நல்லதல்ல.
தி.மு.க.,வைப் பற்றி, வைகோ சொல்லாத வார்த்தைகளே இல்லை. தி.மு.க.,விலிருந்து பிரிந்தபோது, ம.தி.மு.க., தொண்டர்கள் தாக்கப்பட்டனர்.
அப்போது வைகோ, 'இனி ம.தி.மு.க., தொண்டர்கள் மீது கை வைத்தால், உங்கள் வீட்டுப் பெண்கள் வெள்ளைச் சேலை கட்டும் நிலை வரும்' என்றார்.
அப்படியெல்லாம் சொல்லி விட்டு, தற்போது, தி.மு.க.,விடம் ஏதோ எதிர்பார்த்து நிற்கும் அவல நிலையில் இருக்கும் வைகோ, அதற்காக அ.தி.மு.க., செய்த உதவியை மறக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.