ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு பா.ஜ., உறவு இல்லை என உறுதி
ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு பா.ஜ., உறவு இல்லை என உறுதி
ADDED : ஆக 02, 2025 02:48 AM
சென்னை:ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, சென்னையில்முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
பின், வைகோ அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மீண்டும் பெரும்பான்மையுடன் வென்று, ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க., தலைமையில் தனி அரசு தான் அமையும். தமிழகத்தில் பா.ஜ., நுழைய முயற்சிக்கிறது. அதை தடுப்பது, திராவிட இயக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.
அந்த அடிப்படையில் தான், தி.மு.க.,வுடன் ம.தி.மு.க., உடன்பாடு வைத்தது. அதே நிலைப்பாடு இன்றும் தொடருகிறது; நாளையும் தொடரும். ஸ்டாலினை தே.மு.தி.க.,வினர் சந்தித்ததும், 'தி.மு.க., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., வெளியேறும். பா.ஜ., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சை ம.தி.மு.க., துவக்கி விட்டது' என, செய்திகளை பரப்புகின்றனர்.
நான் எல்லா கூட்டங்களிலும் பா.ஜ.,வை எதிர்க்கிறேன். ஹிந்துத்துவா சக்தியை, வேறு எவரும் விமர்சிக்காத அளவுக்கு கடுமையாக பேசி வருகிறேன். அந்த நிலைப்பாட்டில் என்றைக்கும் மாறுதல் வராது. எந்த சூழ்நிலையிலும், இம்மியளவு கூட பா.ஜ.,வுடன் உறவு இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.