ADDED : ஆக 07, 2011 01:02 AM

ஈரோடு : அரிசி அளவிலான வலம்புரி சங்கு, ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில், நகைகள் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள, அரிசி அளவிலான, நுண்ணிய வலம்புரி சங்கு பொதுமக்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளது.
கைவினை கலைஞர் ரவிக்குமார் கூறியதாவது: கிழக்கு கடற்கரையில்தான், அதிக சங்குகள் கிடைக்கும் நிலையில், வலம்புரி சங்கு கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது. அதிலும், மிகவும் அரிதான, அரிசி அளவிலான வலம்புரி சங்கு கிடைக்கும் என்பதை எண்ணிக் கூட பார்க்க முடியாது. தலைமன்னாருக்கும், தூத்துக்குடிக்கும் இடையே உள்ள கடற்பகுதியில், அரிசி அளவிலான வலம்புரி சங்குகள், அவ்வப்போது கிடைக்கின்றன. இச்சங்கு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூஜையறையில் வைத்து வழிபட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
எங்களிடம், 600 முதல், 6,000 ரூபாய் விலையிலான, பல்வேறு வடிவிலான வலம்புரி சங்குகள் கிடைக்கின்றன. இதுபோன்ற அரிய வகை பொருட்கள், பூம்புகார் விற்பனை நிலையத்தில் கண்காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

