சென்னை - ராமேஸ்வரம் இடையே 'வந்தே பாரத்' ரயில் இயக்க வேண்டும்:ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
சென்னை - ராமேஸ்வரம் இடையே 'வந்தே பாரத்' ரயில் இயக்க வேண்டும்:ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 01, 2024 06:51 AM

மதுரை : ''சென்னை - ராமேஸ்வரம் இடையே 'வந்தே பாரத்' ரயில் இயக்க வேண்டும்'' என தெற்கு ரயில்வே மதுரை கோட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
மதுரையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மண்டல பொது மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா தலைமை வகித்தார். திருச்சி, மதுரை,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இருந்து எம்.பி.,க்கள் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:
வாரம் 3 நாள் ரயில்
மதுரை வெங்கடேசன் (கம்யூனிஸ்ட்): ஓராண்டாக மதுரை ரயில்வேயில் 18 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறேன். அதை இன்று கூட்டத்தில் எடுத்துரைத்தேன். அதனை விரைவில் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார். அதில் முக்கியமாக துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் வாரம் ஒரு முறை ரயிலை, தினசரி இயக்க வலியுறுத்தினேன்.
அதற்கு வாரம் 3 முறை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - ஐதராபாத் தினசரி ரயிலை, நாகர்கோவிலில் இருந்து இயக்கும்படி தெரிவித்தேன். அதனை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷனை மதுரையின் 2வது ஸ்டேஷனாக மாற்ற கோரிக்கை வைத்தோம். அதையும் நிறைவேற்றித் தருவதாக மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
புதிய ரயில் தேவை
திருச்சி திருநாவுக்கரசர் (காங்.,): ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இக்கூட்டத்தில் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றால் பயனுள்ளதாக இருக்கும்.
ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு புதிய ரயில் தேவை.
ஜூலையில் தீர்வு
தேனி ரவீந்திரநாத் (அ.தி.மு.க.,): சென்னை - போடி நாயக்கனுார் செல்ல வாரம் 3 நாட்கள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தினசரி இயக்கவும், மதுரையிலிருந்து பயணிகள் ரயில் புறப்பட்டு போடிக்கு 10:30 மணிக்கு வந்து சேருகிறது. இதனால் கல்லுாரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் பயணிகள் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
அதையும் செய்து தருவதாக மேலாளர் கூறியுள்ளார். திண்டுக்கல் - லோயர்கேம்ப் வரை ரயில் இயக்க வேண்டும் என்பது உட்பட 7 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்.
இதற்கான தீர்வு ஜூலை மாதத்தில் எனக்கு வழங்குவதாக கூறியுள்ளனர்.
இரட்டை ரயில்பாதை
வைகோ (ம.தி.மு.க): மதுரை - கோவை இடையே அகலப் பாதை கொண்டு வந்து ஐந்தாண்டுகளாகி விட்டது. இதற்கான செலவு ரூ. 750 கோடி. இதில் ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் - செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும்.
போக்குவரத்தை எளிதாக்க செங்கோட்டை - விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை கடிதம் மூலம் வைகோ முன் தெரிவித்து இருந்தார்.
ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்
ராமநாதபுரம் தர்மர் (அ.தி.மு.க..): தென்மாநிலமான தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு, வட மாநில பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.
இதனால் கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளேன்.
பாம்பன் பாலப் பணிகள் முடிந்தவுடன் அந்த ரயிலை இயக்க வேண்டும்.

