வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரச்சொல் சிந்தனைக்களம்
வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரச்சொல் சிந்தனைக்களம்
ADDED : நவ 09, 2025 02:18 AM

வந்தே மாதரம் தேசிய பாடலாக ஏற்கப்பட்ட 150வது ஆண்டு விழாவை, நாட்டு மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வந்தே மாதரம் தேசபக்தி பாடல், இன்றும் நம் தேசிய உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் இருக்கிறது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் இசையமைத்த வந்தே மாதரம் பாடல், இந்திய சுதந்திர போராட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்ட நீண்ட மற்றும் வளமான வரலாற்றை கொண்டுள்ளது.
நம் நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் இயற்றப்பட்டது. 1838 ஜூன், 27ம் தேதி பிறந்த இவர், மேற்கு வங்க எழுத்தாளர், கவிஞர் மற்றும் பத்திரிகையாளர். வந்தே மாதரம் பாடல் முதன் முதலில், 1876ம் ஆண்டில் இவரது, 'ஆனந்தமடம்' நாவலில் தான் வெளியிடப்பட்டது. 1950ல், அதை நம்நாட்டின் தேசிய பாடலாக இந்திய அரசியலமைப்பு சபை ஏற்றது.
வெள்ளையர்களுக்கு எதிராக தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட பங்கிம் சந்திர சட்டோபாத்யாய், 13 புதினங்கள் உட்பட பல நுால்களை வங்க மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நுால்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
'வந்தே மாதரம்' என்ற சொல்லானது, ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது.
தேசபக்தர்கள் எல்லாரும் முழங்கிய சொல் இது! வங்கப்பிரிவினை ஏற்பட்ட போது, மக்கள் ஹூக்ளி நதியில் மூழ்கியபடி கூட்டம் கூட்டமாக உணர்ச்சிப் பெருக்கோடு, 'வந்தே மாதரம்' பாடலை ஒருசேரப் பாடினர்.
தடியடி, துப்பாக்கி சூடு இந்தப்பாடல், இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை துாண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு, இப்பாடலை பொது இடங்களில் பாடுவதற்கு தடை விதித்தது.
கடந்த, 1906-ல், வங்கப்பிரிவினைக்கு வித்திட்டார் கர்சன் பிரபு. உடன், வங்கதேசத்துமக்கள் பெரு ம் போராட்டத்திற்கு தயாராகினர். 1906 ஏப்ரல் 14-ம் நாள் வங்க மாநில காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்பே, வந்தே மாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார், ஸ்ரீ அரவிந்தர். அப்பாடலுக்கு இசை அமைத்து கொடுத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
வங்க பிரிவினைக்கு எதிராக மக்கள் ஊர்வலமாக சென்ற போது, வந்தே மாதரம் பாடலை இசையோடு பாடினார் தாகூர். ஊர்வலத்திற்கு அரவிந்த் கோஷ் தலைமை தாங்கினார். விபின்சந்திரபால், சுரேந்திரநாத் பானர்ஜி உட்பட பலரும் -வந்தே மாதரம் என்று முழங்கினர்.
கூட்டத்தினர் மத்தியில் கோபம் கொந்தளித்தது. கர்சன் பிரபுவின் உருவ பொம்மை தீவைத்துக் கொளுத்தப்பட்டது. தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடந்தது. வந்தே மாதரம் என்ற வார்த்தையை கண்டு பயந்த ஆங்கிலேயே அரசு, அந்த வார்த்தையை உச்சரிக்கக் கூடாது என தடை விதித்தது.
இந்தச் சொல்லை உச்சரித்ததற்காக துாக்கு கயிற்றை முத்தமிட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர். துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானவர்கள் பல்லாயிரம் பேர்.
இப்படித்தான், வந்தே மாதரம் என்ற சொல் இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் மந்திரச் சொல்லானது. இந்தியர் ஒவ்வொருவரும், வந்தே மாதரம் என்று முழங்கத் துவங்கினர். இந்த முழக்கம் லண்டன் மாநகர தெருக்களிலும் ஒலித்தது.
கோகலே, 1912ல் ஆப்ரிக்கா சென்ற போது, அவரை இந்தியர்கள், 'வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று உரக்கச் சொல்லியே வரவேற்றனர். லாலா லஜபதிராய், 'வந்தே மாதரம்' என்ற பெயரில் ஒரு பத்திரிகையையும் துவங்கி நடத்தினார்.
சக்தி வாய்ந்த போர்க்குரல் தமிழகத்தில் பாரதி, 'வந்தே மாதரம் என்போம்; எங்கள் மாநில தாயை வணங்குதும் என்போம்' -என்ற உணர்ச்சி ததும்பும் பாடலை எழுதி, தெருவெல்லாம் முழங்கச் செய்தார்.
வ.உ.சி.,யும், சுப்பிரமணிய சிவாவும், கல்லிடைக்குறிச்சி கோமதி சங்கர தீட்சிதரும், 'வந்தே மாதரம்' என்ற முழக்கத்தை ஊரெங்கும் ஒலிக்கச் செய்தனர்.
பாரதியின் பாடலையும், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா பாடலையும் தெருக்களில் பஜனை செய்தவர்கள், சுதந்திர விதையை தேசபக்தர்களிடம் விதைத்தனர்.
வங்காள தேசியவாதத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த இலக்கிய இதழ், பங்கதர்ஷன். இதை, 1872ல் சட்டோபாத்யாய் துவங்கினார்.
'பங்கதர்ஷன்' ஒரு மாதாந்திர இலக்கிய இதழாகவும், அவரின் மற்றொரு படைப்பான, 'ஆனந்தமத்' ஒரு நாவலாகவும் இருந்தது. இரண்டையும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் வெளியிட்ட நேரத்தில் தான், வங்காளத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் சுதந்திர எழுச்சி வீறுகொண்டது.
கடந்த, 1939 ஜூலையில், 'ஹரிஜன்' இதழில் மஹாத்மா காந்தி கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தார். அதாவது, 'வந்தே மாதரம் பாடலின் மூலாதாரம் எதுவாக இருந்தாலும், அது எப்படி, எப்போது இயற்றப்பட்டது என்பது முக்கியமல்ல, பிரிவினை நாட்களில் ஹிந்துக்களுக்கும்,-- வங்காள முஸ்லிம்களுக்கும் இடையே மிகவும் சக்தி வாய்ந்த போர்க்குரலாக மாறியது.
'அது ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம். நான் அதனுடன் துாய்மையான தேசிய உணர்வில் இணைந்தேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதை தாகூரும் ஆமோதித்தார். நாடு விடுதலை பெற்ற பின், இந்திய அரசியல் நிர்ணயசபை கூடி, அரசியல் அமைப்பை நன்கு விவாதித்து முடிவு செய்தது.
ஆனால், தேசிய கீதம் எது என்பதை முடிவு செய்வது, உணர்வுபூர்வமான பிரச்னை என்பதால், அதை பகிரங்கமாக விவாதிக்காமல் உறுப்பினர்களுக்கு மத்தியிலே விவாதித்து, இறுதியில், 'ஜன கண மன' பாடல் தான் இந்தியாவின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், வந்தே மாதரம் பா டலுக்கும், ஜன கண மன பாடலுக்கும் இணையான அங்கீகாரம் கொடுக்கப்படலாம் என, 1950 ஜனவரி 24ம் தேதி முடிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம், ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில், 'நாட்டின் சுதந்திர போராட்டத்தில் வரலாற்று பங்காற்றிய வந்தே மாதரம் பாடல், ஜன கண மன உடன் சமமாக மதிக்கப்படும்; அதனுடன் சமமான அந்தஸ்தைப் பெறும்' என்று தெரிவித்திருந்தார்.
இன்றுவரை அந்த பாடல் ஜீவன்மிக்கதாய் எல்லாரின் மனதிலும் குடிகொண்டிருக்கிறது. அகில இந்திய வானொலியும், இந்த பாடலுடன் தான் தன் காலை ஒலிபரப்பை துவங்குகிறது. வந்தே மாதரம் என்பது சாதாரண சொல் அல்ல; அது ஒரு மந்திரச்சொல்
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
கலைமகள் மாத இதழின் ஆசிரியர்.
இ - மெயில்: kizhambur@gmail.com!

