ADDED : மே 06, 2025 12:53 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நில அளவை செய்வதற்காக, ரூ. 3500 லஞ்சம் வாங்கிய பனிச்சகுடி வி.ஏ.ஓ., நைனாமுகமது 31, தலையாரி சித்ரா 48, இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவாடானை தாலுகா பெருவாக்கோட்டையை சேர்ந்த ஒருவர் அவருக்கு சொந்தமான இடத்தை நில அளவை செய்வதற்காக பனிச்சகுடி குரூப் வி.ஏ.ஓ. நைனாமுகமதுவை அணுகினார். அதற்கு வி.ஏ.ஓ. ரூ.4000 லஞ்சம் கேட்டார். ரூ.3500 தருவதாக பேரம் பேசபட்டது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ராமநாதபுரம் லஞ்சஒழிப்புத்துறையில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.2500 நேற்று காலை 11:00 மணிக்கு பெருவாக்கோட்டை கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்தில் நைனாமுகமது முன்னிலையில் தலையாரி சித்ராவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நைனாமுகமது, சித்ரா ஆகியோரை கைது செய்தனர்.
