மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு வாசன் குற்றச்சாட்டு
மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு வாசன் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 11, 2025 02:16 AM
நாகர்கோவில்:''தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் அரசாக தி.மு.க., உள்ளது''என த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:
கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சியாக த.மா.கா., செயல்படுவதற்கான பணிகளை மாநிலம் முழுவதும் செய்து வருகிறோம். கோவையில் மாணவி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, மக்களை ஏமாற்றும் அரசாக தி.மு.க., உள்ளது. கஜானாவை நிரப்ப அரசே டாஸ்மக்கை திறந்து வைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீரில்லாத நிலையில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது. மும்மொழி கொள்கை, நீட் தேர்வு, என தவறான பிரச்னைகளை மக்களிடம் திணித்து அரசியல் செய்கிறது. தமிழகத்தில் இரு மொழி கொள்கையை அனைத்து பெற்றோரும் எதிர்க்கிறார்கள். திணிப்பு இல்லாமல் மூன்றாவது மொழியை கற்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
வக்ப் வாரிய சட்டத்தில் ஏழை, எளிய முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

