காமராஜர் பெயர் இல்லாமல் சந்தையை திறக்க வாசன் எதிர்ப்பு
காமராஜர் பெயர் இல்லாமல் சந்தையை திறக்க வாசன் எதிர்ப்பு
ADDED : ஏப் 05, 2025 08:42 PM
சென்னை:காமராஜர் பெயர் இல்லாமல், திருத்தணி காய்கறி சந்தையை திறக்க இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில், 50 ஆண்டுகளாக காமராஜர் பெயரில், காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது, புதுப்பிக்கப்பட்ட சந்தைக்கு, பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், 'காமராஜர் பெயரே நீடிக்கும்' என, கடந்த மார்ச் 10ல், திருத்தணி நகராட்சி கமிஷனர் அறிவித்தார்.
இந்நிலையில், வரும் 9ம் தேதி காமராஜர் பெயர் இல்லாமல், திருத்தணி காய்கறி சந்தையை, அமைச்சர் நேரு திறக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. நாட்டுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த காமராஜரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக இது உள்ளது. அதனால், முன்பு முடிவெடுத்தது போலவே, சந்தைக்கு காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

