சொத்து வழிகாட்டி மதிப்பு அடிக்கடி உயர்வு தி.மு.க., அரசு கைவிட வாசன் வலியுறுத்தல்
சொத்து வழிகாட்டி மதிப்பு அடிக்கடி உயர்வு தி.மு.க., அரசு கைவிட வாசன் வலியுறுத்தல்
ADDED : ஏப் 01, 2025 06:39 PM
சென்னை:'சொத்தின் வழிகாட்டி மதிப்பை, அடிக்கடி உயர்த்தும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில், சொத்தின் வழிகாட்டி மதிப்பை, 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. புதிதாக உருவாக்க உள்ள மனைப்பிரிவுக்கு, மதிப்பு நிர்ணயம் செய்ய, மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு, மனு அனுப்பினால், மனைப்பிரிவை சுற்றியுள்ள மனைகளில், எது அதிகபட்ச மதிப்புக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது.
ஏற்கனவே, வழிகாட்டி மதிப்பை, 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்திய நிலையில், மாவட்டப் பதிவாளர், தான் நிர்ணயம் செய்ய வேண்டிய மதிப்பில் இருந்து, மேலும், 30 முதல் 50 சதவீதம் வரை சேர்த்து, அதிகபட்சமாக மதிப்பு நிர்ணயம் செய்து வழங்குகிறார். நடுத்தர மக்கள் தங்கள் சேமிப்பில், ஒரு வீட்டு மனை வாங்க செல்லும்போது, நிர்ணயித்த தொகையை விட, திடீரென கூடுதல் தொகை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்களின் நீண்ட கால கனவு நிறைவேறாமல் போகிறது.
தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல், பதிவு கட்டணத்தை உயர்த்தினால் கூட, தமிழக அரசுக்கு வருமானம் வரும்; மக்களும் பயனடைவர். ஆனால், சொத்து வழிகாட்டி மதிப்பை, மீண்டும், மீண்டும் அதிகரிப்பதால், பொதுமக்களுக்கு வரி சுமை கூடிக்கொண்டே போகிறது. எனவே, தமிழக அரசு, சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.