ADDED : பிப் 03, 2024 12:48 AM
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை அவரது இல்லத்தில், த.மா.கா., தலைவர் வாசன் சந்தித்துப் பேசினார்.
கடந்த, 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்ற த.மா.கா., வரும் லோக்சபா தேர்தலில், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இருவருடனும் நல்ல நட்பில் இருந்து வரும் வாசனுக்கு, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி முறிவு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
த.மா.கா.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத நிலையில், வாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை அ.தி.மு.க., வழங்கியது. ஆனாலும், பா.ஜ., மேலிடத்துடன் உள்ள நெருக்கம் காரணமாக, அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் வாசன் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை பழனிசாமியை அவரது இல்லத்தில் வாசன் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமர் மோடி தன் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்.
எனவே, அவருக்கு எதிரான அரசியல் முடிவை எடுக்க முடியாத நிலையில் இருப்பதை எடுத்துக் கூறியதாக, த.மா.கா., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அதனால் தான் இந்த சந்திப்பு குறித்து அ.தி.மு.க., - த.மா.கா., இரு தரப்பிலிருந்து எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்றும் த.மா.கா.,வினர் கூறினர்.

