ஆணவ கொலையை தடுக்க சட்டம் முதல்வரிடம் வி.சி., - கம்யூ., மனு
ஆணவ கொலையை தடுக்க சட்டம் முதல்வரிடம் வி.சி., - கம்யூ., மனு
ADDED : ஆக 07, 2025 04:23 AM
சென்னை : ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து கூட்டாக மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில், ஜாதி, மத மறுப்பு திருமண தம்பதியர் தொடர்ச்சியாக ஆணவ கொலை மற்றும் தாக்குதலுக்கு ஆளாவது தொடர்கின்றன.
இந்த அவலநிலைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டங்கள் இயற்ற வேண்டும். சமீபத்தில் ஜாதி ஆணவ கொலைக்கு பலியான 27 வயது கவின் செல்வகணேஷ் போல, 100க்கும் மேற்பட்ட இளம் உயிர்கள், கடந்த 10 ஆண்டுகளில் பலியாகியுள்ளன.
விருத்தாசலம் கண்ணகி முருகேசன், உசிலம்பட்டி விமலாதேவி, சூரக்கோட்டை அபிராமி, ஓசூர் நந்தீஸ் சுவாதி, கிருஷ்ணகிரி சுபாஷ் என, இந்த பட்டியல் நீள்கிறது.
இந்தக் குற்றங்கள், பட்டியல் வகுப்பினருக்கும், பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மட்டுமன்றி, பட்டியல் ஜாதி அல்லாத வகுப்பினர்களுக்கு இடையிலும் நடக்கின்றன.
எனவே, ஜாதி ஆணவ கொலைகளை தடுக்க, சிறப்பு சட்டத்தை சட்டசபையில் உடனே நிறைவேற்ற வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதியருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு பின், மூவரும் அளித்த பேட்டி விபரம்:
திருமாவளவன்: ஆணவ கொலையை தடுக்க, புதிய சட்டம் தேவை என, இந்திய சட்ட ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவை ஏற்கனவே முன்மொழிந்துள்ளன. தேசிய அளவில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
எனினும், மாநில அளவில் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்பதால், முதல்வரை சந்தித்து சுட்டிக்காட்டினோம். அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றி பேசுவாரா என தெரியாது. நெல்லை கவின் கொலையில், பாரபட்சமின்றி முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார்.
முத்தரசன்: தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரிக்கின்றன. அவற்றை சட்ட ரீதியாக தடுப்பதற்கு, தனி சட்டம் இயற்ற வலியுறுத்தினோம்; பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். சிறப்பு சட்டம் கொண்டு வருவார் என எதிர்பார்க்கிறோம்.
சண்முகம்: ராஜஸ்தானில் சிறப்பு சட்டம் உள்ளது. ஜாதி வெறி சக்திகள் இந்தியா முழுதும் அதிகரித்துள்ளன. வழக்கமான சட்டங்களை விட, சிறப்பு சட்டம் இயற்றினால் தான், இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.