ADDED : செப் 29, 2024 01:35 AM
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், இந்தியாவைக் காக்க காங்கிரஸ் -- தி.மு.க., இணைந்து செயல்படுகிறது.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: இந்தியாவின் பெயரை பாரத் என்றும், வாரணாசியை தலைநகராக்கவும் பா.ஜ., திட்டமிடுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்கிறது. இதைத் திணிக்க நினைத்தால், இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்காது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்: கடந்த 2019ல் பா.ஜ.,வுக்கு எதிராக, வலுவான கூட்டணியை உருவாக்கியது தி.மு.க.,வின் பெரும் சாதனை. அதன் விளைவாகவே, 'இண்டி' கூட்டணி உருவாக்கப்பட்டு, பா.ஜ., பெரும்பான்மை பெறுவது தடுக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்: எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை உருவாக்க, பா.ஜ., திட்டமிடுகிறது. அதை முறியடிக்கும் சக்தி தி.மு.க.,வுக்கு உள்ளது. கவர்னர் போட்டி அரசு நடத்தக்கூடாது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தனித்துறையை உருவாக்க வேண்டும்.
வி.சி., தலைவர் திருமாவளவன்: இருமொழிக் கொள்கை, ஹிந்தி எதிர்ப்பு, மாநில உரிமை ஆகியவற்றில், இன்றும் தி.மு.க., உறுதியுடன் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் குடும்ப வாரிசு அல்ல; கருத்தியல் வாரிசு.
இந்திய அளவில் அரசியல் தாக்கத்தை மட்டுமல்ல, கருத்தியல் தாக்கத்தையும் தி.மு.க., ஏற்படுத்தியது. தி.மு.க., வுடன் இணைந்து சனாதன சக்திகளுக்கு எதிராக வி.சி., போராடும்.
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: நம்மைக் கண்டால், 'இவர்கள் எல்லாம் ஒரு ஆளா' என டில்லியில் கேட்கின்றனர். திருப்பி நாம், 'நீயெல்லாம் ஒரு ஆளா' என்று கேட்கும் நிலையில் உள்ளோம். முதல்வர் நேற்று முன்தினம் கேட்டுவிட்டு வந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.