ADDED : டிச 07, 2024 09:49 AM

சென்னை: நேற்று வந்த கூத்தாடி என்று த.வெ.க., தலைவர் விஜயை விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.வும்., துணை பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா பற்றிய பேச்சுகள் ஓயவில்லை. இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார். விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், இதற்கு தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தமே காரணம் என்று பேசினார்.
நடிகர் விஜய்யின் இந்த பேச்சு விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் இடையே கடும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. மேடையில் ஒரு பக்கம் விஜய் பேசி முடிக்க, அதே நேரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், நடிகர் விஜய்யின் பேச்சை விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது; களத்தில் இருந்து சுயம்புவாக எழுந்த ஒரு தலைவரை, சுயமாக முடிவு எடுக்கக்கூடிய திறனும், அறிவும் பெற்ற ஒரு தலைவரை எழுத்தாலும், பேச்சாலும், அறிவார்ந்த வெளிப்பாட்டாலும் முதிர்ச்சியாலும் பண்பாக அரசியல் களத்தில் உயர்ந்து நிற்கக் கூடிய ஒரு தலைவரை கூட்டணிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி கிடப்பவர், முடிவெடுக்கத் தெரியாதவர் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை விஜய் ஏற்படுத்தியிருப்பது அபத்தமானது அவலமான பேச்சு. கண்டிக்கத்தக்க பேச்சு.
திருமாவளவன் குறித்து கருணாநிதி அப்படி சொன்னதில்லை; ஜெயலலிதா அப்படி சொன்னதில்லை; இன்றைக்கு இருக்கக்கூடிய முதல்வர் அப்படி சொன்னதில்லை. அவர்களுக்கு முரணான கருத்துக்களை வைத்த போதும் கூட அது அவர்களின் கட்சியின் கொள்கை அவர் பேசுகிறார் என்று தான் இப்பொழுது கூட முதல்வர் சொல்வார்.
கருணாநிதியுடன் எத்தனையோ விஷயங்களில் திருமாவளவன் முரண்பட்டிருக்கிறார். ஒருபோதும் அவருடைய ஆளுமையை சிதைத்து அவர் பேசியது கிடையாது. திருமாவளவன் நமது கூட்டணியில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எங்கிருந்தாலும் அவர் வாழ்க, நல்ல தலைவர் என ஜெயலலிதா வாழ்த்தி உள்ளார். இதுதான் திருமாவளவன் அவருடன் அரசியல் செய்த தலைவர்களிடமிருந்து பெற்றுள்ள சான்றிதழ்.
யார் இந்த விஜய் எங்கள் தலைவரை இப்படி கொச்சைப்படுத்துவதற்கு? தி.மு.க., கட்டுப்பாட்டில் எங்கள் தலைவர் இருக்கிறார் என்று எப்படி அவர் பேசலாம்? எங்களுடைய தலைவர் முடிவெடுக்கக் கூடிய தலைவர், அறிவார்ந்த தலைவர் என்பது உலகத்துக்கே தெரியும்.
35 வருடமாக பத்திரிகையாளர்கள் அவரைப் பார்த்து வருகிறார்கள். அவர் எழுதி வைத்து படித்தார் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்க. நேற்று வந்த இந்த கூத்தாடி இப்படி பேசலாமா? இதை அனுமதிக்க முடியுமா? தி.மு.க.,வின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்று விஜய் எப்படி பேசலாம்? விஜய் யார்? என்று ஆவேசமாக பேசினார்.