வீரமாமுனிவர் மணிமண்டபம் : திறந்து வைத்தார் முதல்வர்
வீரமாமுனிவர் மணிமண்டபம் : திறந்து வைத்தார் முதல்வர்
ADDED : ஜன 23, 2024 10:24 PM

சென்னை:வீரமாமுனிவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை, கணியன் பூங்குன்றனார் நினைவுத்துாண் போன்றவற்றை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.
இத்தாலிய நாட்டை சேர்ந்தவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. இவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகளை போற்றும் வகையில், துாத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி கிராமம், புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில், ஒரு கோடி ரூபாயில், வீரமாமுனிவர் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவை போற்றும் வகையில், நாமக்கல் நகரில் உள்ள நினைவு இல்லத்தில், 20 லட்சம் ரூபாயில், அவரது மார்பளவு சிலை; சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் தாலுகா மகிபாலன்பட்டியில், 23.26 லட்சம் ரூபாய் செலவில், புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத் துாண் அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றை முதல்வர், நேற்று முன்தினம் திறந்து வைத்தார்
சுதந்திர போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலு நாச்சியாருக்கு பெருந்துணையாக நின்று, தன்னுயிரை தியாகம் செய்த வீராங்கனை குயிலி. அவரது தியாகத்தை போற்றும் வகையில், சிவகங்கை தாலுகா ராகினிப்பட்டி நினைவு வளாகத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், அவரது உருவச்சிலை அமைக்கப்பட உள்ளது
வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுடன் சேர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய, சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் நினைவை போற்றும் வகையில், சிவகங்கை தாலுகா நகரம்பட்டியில், 50 லட்சம் ரூபாயில், அவரது உருவச்சிலை நிறுவப்பட உள்ளது
மன்னர் பூலித்தேவர் படையின் முக்கிய தளபதியாக இருந்தவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணி காலாடியின் நினைவை போற்றும் வகையில், தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில், 50 லட்சம் ரூபாயில், உருவச்சிலை அமைக்கப்பட உள்ளது
பொதுவுடைமை சிந்தனையாளர் ஜீவாவை, சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் காந்தி சந்தித்து பேசினார். அதன் நினைவாக, அங்கு 3 கோடி ரூபாயில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
கல்லுாரி கட்டடங்கள்...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், அரசு பாலிடெக்னிக், பல்கலைகள் ஆகியவற்றில், 96.75 கோடி ரூபாயில், வகுப்பறை, ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகு சாலை, விடுதிகள், பணிமனைகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள்பங்கேற்றனர்.

