வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கிறார்: முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு
வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கிறார்: முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு
UPDATED : மார் 20, 2025 04:14 PM
ADDED : மார் 20, 2025 02:50 PM

சென்னை: 'சட்டசபையில் அதிகபிரசிங்கித்தனமாக நடந்து கொண்ட வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும். மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த உச்சநீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய படி பேச வாய்ப்பு கேட்டு, கை நீட்டிய படி அமைச்சர்கள் இருக்கையை நோக்கி முன்னோக்கி தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் நடந்து வந்தார்.
இதனை கண்டித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் வேல்முருகன் செயல்பாடு வேதனைக்குரியதாக இருக்கிறது. அவையை விதிமீறி அதிக பிரசங்கித்தனமாக பேசுகிறார். இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து பேசுவது மரபல்ல
இது ஏற்புடையதல்ல. அவர் இப்படி செய்வது எனக்கு வேதனை அளிக்கிறது. அமைச்சர்களை நோக்கி கைநீட்டி பேசியதற்கும், வேல்முருகன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சபாநாயகர் எச்சரிக்கை
பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ள கூடாது. அப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் இதற்கு முன் எம்.எல்.ஏ., மீது இப்படி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறியது இல்லை. இதுபோன்று எந்த எம்.எல்.ஏ.,யும் இனிமேல் நடந்து கொள்ள கூடாது. வேல்முருகன் தனது செயலை திருத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீக்கம்
இடஒதுக்கீடு தொடர்பாக வேல்முருகன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்று வேல்முருகன் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
விளக்கம்
சட்டசபையில் நடந்தது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், ' நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் நடந்ததை கூறினேன். முதல்வரின் கருத்து வருத்தம் அளிக்கிறது' என தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் தெரிவித்தார்.
கூட்டணி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரான வேல்முருகன், தி.மு.க., கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.