ADDED : நவ 13, 2024 04:19 AM

சென்னை ; ''வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்துள்ள தங்க மணி தான், சங்க காலத்தில் காசு என்ற பெயரில் அழைக்கப்பட்டது,'' என, நாணய ஆய்வாளர் மன்னர்மன்னன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில், தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு நடக்கிறது. இங்கு, 34 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.
கல் மணிகள்
அவற்றிலிருந்து, பழமையான அணிகலன்கள், வேட்டையாடும் கருவிகளை தயாரிக்கும் மூலப் பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள், காளை வடிவ சுடுமண் பொம்மைகள், செப்பு நாணயங்கள், விலை உயர்ந்த அரிய கல் மணிகள் உள்ளிட்ட 7,500க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
சமீபத்தில் இங்கு, 1.28 மீட்டர் ஆழத்தில், 0.15 கிராம் எடையுள்ள தங்க மணி கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, நாணய ஆய்வாளர் மன்னர்மன்னன் கூறியதாவது:
தமிழக வரலாற்றுக்கு முதன்மை ஆதாரங்களாக உள்ளவை சங்க இலக்கியங்கள். அவற்றில், காசு, பொன், கானம் போன்ற சொற்கள் உள்ளன.
இதில் உள்ள, காசு என்ற சொல், பண்டைய நாணயங்களை குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர். தற்போது, காசு என்பது நாணயத்தை குறித்தாலும், சங்க காலத்தில் அணிகலன்களில் கோர்க்கப்பட்ட மணிகளையே காசு என்றனர்.
அதாவது, பெண்களின் கழுத்தணி, இடையணி, குழந்தைகளின் கால் அணிகளிலும், இந்த மணிகள் கோர்க்கப்பட்டன. குறுந்தொகையில், புதுநுால் நுழைத்த பொற்காசு என்ற வரி உள்ளது. அதில், கிளி கொத்திய வேப்பம்பழம் போன்றது என, விளக்கம் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, வேறு இலக்கியங்களில், வேப்பம் பழம், உகாப் பழம், நெல்லிக்கனி, குமிழம் பழம், கொன்றைப்பூ மொட்டு ஆகியவை, காசுக்கு உதாரணங்களாக கூறப்பட்டு உள்ளன.
பண்டமாற்று முறை
அகநானுாறில், 'பளிங்கின் துளைக்காசு' என்ற வரி உள்ளது. அதாவது, அக்காலத்தில், பளிங்கு கல்லிலும் மணிகள் கோர்க்கப்பட்டு உள்ளன.
சங்க காலத்தின் பிற்பகுதியில், ரோம் நாட்டிலிருந்து வந்த நாணயங்களை, பெண்கள் மணி போல கோர்த்து அணியும் வழக்கம் வந்த பின், நாணயத்துக்கு காசு என்ற பதம் பயன்பட்டிருக்கலாம். அதுவே பின், காசு மாலையாக நிலைத்திருக்கலாம்.
அதேசமயம், சங்க கால வர்த்தகத்தில், பொன், கானம் போன்ற சொற்களே, நாணயங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. என்றாலும், மக்கள் பண்டமாற்று முறையையும், மேல்மட்ட வர்த்தகர்கள் நாணயங்களையும் பயன்படுத்தினர்.
அக்காலத்தில், பொன் என்ற சொல் தங்கத்துக்கும், கானம் என்ற சொல், தங்க நாணயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக மன்னர்கள், தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இடங்களில் மட்டும், முத்திரை காசுகளை பயன்படுத்தி இருக்கலாம். இந்த பழக்கம் கி.மு., 300 முதல் கி.பி., 100 வரை இருந்திருக்கலாம்.
அதன்படி, சங்க இலக்கியங்கள் சொல்லும், தங்க காசு தான், தற்போது, வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்துள்ள தங்க மணியாகும். நம் காசு என்ற சொல்தான், காலனி ஆதிக்கத்தின் போது, 'கேஷ்' ஆக மாறியது. இதுகுறித்து, 'பணத்தின் பயணம்' என்ற நுாலில் நான் விளக்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.