வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு; கோர்ட்டில் அரசு தரப்பு தகவல்
வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு; கோர்ட்டில் அரசு தரப்பு தகவல்
ADDED : ஜன 24, 2025 01:03 PM

சென்னை: 'வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளனர். முரளிராஜா பொய்த்தகவல் பரப்பியுள்ளார்' என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், 2022ம் ஆண்டு டிச., 26ல், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை, இரண்டு ஆண்டுக்கு மேலாக, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை, சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜ்கமல், மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் பொது நல வழக்கு தொடர்ந்தனர். அவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு, சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டிருந்தது. பின், இந்த வழக்குகள், நீண்ட நாட்களாக விசாரணைக்கு வரவில்லை.
இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை முடிந்து, புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியதாவது: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளனர். முரளிராஜா பொய்த்தகவல் பரப்பியுள்ளார்.
முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் செய்துள்ளனர். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுக்கு பிறது துப்பு துலங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

