வேங்கைவயல் விவகாரம்: மீண்டும் ஒரு மாத அவகாசம் கோரி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் மனு
வேங்கைவயல் விவகாரம்: மீண்டும் ஒரு மாத அவகாசம் கோரி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் மனு
ADDED : ஆக 21, 2024 02:20 AM
புதுக்கோட்டை,:புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டு, நேற்றுடன் 603 நாட்கள் ஆகின்றன. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தால் தீர்வு காணப்படும் என்ற எண்ணத்தில், 583 நாட்களாக 330 நபரிடம் விசாரணை நடத்தியும், இன்னமும் தீர்வு காணப்படவில்லை; குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், 31 பேருக்கு டி.என்.ஏ., பரிசோதனையும், ஐந்து பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேற்கொண்டுள்ளனர். பல தடவை, அவகாசம் கேட்டு, கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, பெற்றுள்ளனர்.
எனினும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என, புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஒரு வாரத்திற்கு முன், இரண்டு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், புதுக்கோட்டை மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார், மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு, நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

