வெங்கையா, பழனிசாமி பரிந்துரையால் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ஆர்.,
வெங்கையா, பழனிசாமி பரிந்துரையால் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ஆர்.,
ADDED : ஆக 19, 2025 04:00 AM

சென்னை: துணை ஜனாதிபதி பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் பெயரை, வெங்கையா நாயுடுவும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல், வரும் செப்., 9ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டளிப்பர். தனித்து வெற்றி பெறும் அளவுக்கு, பா.ஜ.,வுக்கு பலம் இல்லை.
இதனால், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து, அவர்களின் ஒப்புதலுடன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டது.
கடந்த இரு வாரங்களாக, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோர், துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக இருந்த ஐந்து ஆண்டு காலத்தில், பா.ஜ.,வுக்கு பிரச்னை இல்லாமல் இருந்தது. ஆனால், ஜக்தீப் தன்கரின் செயல்பாடுகள், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தின.
அதனால், துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, வெங்கையா நாயுடுவிடம், மோடி ஆலோசித்துள்ளார். வெங்கையா நாயுடு பா.ஜ., தேசிய தலைவராக இருந்தபோது, தமிழக பா.ஜ., தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இருந்தார்.
இதனால், இருவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. 2014 லோக்சபா தேர்தலில், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனை நிறுத்த பா.ஜ.,வில் எதிர்ப்பு எழுந்தது.
வெங்கையா நாயுடு ஆதரவுடன் அந்த எதிர்ப்பை முறியடித்தார். அவரது பரிந்துரையால் தான், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் பதவியும் கிடைத்தது.
வெங்கையா நாயுடுவுடன் நெருக்கமாக இருந்ததால், அவர் வாயிலாக நீண்ட காலமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடனும் சி.பி.ராதாகிருஷ்ணன் நட்பாக பழகியதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ஆந்திராவில் பா.ஜ., -- தெலுங்கு தேசம் கூட்டணி அமைய, வெங்கையா நாயுடுவுடன் இணைந்து சி.பி.ராதாகிருஷ்ணனும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இக்கூட்டணி வெற்றியால் தான், மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக முடிந்தது. அதற்கு பரிசாகவே, மிகப்பெரிய மாநிலமான மஹாராஷ்டிரா கவர்னர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த சூழலில் தான், துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பேசியபோது, சி.பி.ராதாகிருஷ்ணன் பெயரை வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார். அதற்கு சந்திரபாபு நாயுடுவும் உடனே சம்மதித்து உள்ளார்.
அதுபோல, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் அமித் ஷா பேசியபோது, சி.பி.ராதாகிருஷ்ணன் பெயரையே அவரும் பரிந்துரைத்துள்ளார்.
அதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் துணை ஜனாதிபதி வேட்பாளராக, சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதாக பா.ஜ., வட்டாரம் தெரிவிக்கிறது.