சி.பி.சி.ஐ.டி., அறிக்கையை ஏற்க முடியாது; நீதி விசாரணை ஆணையம் வேண்டும்; திருமாவளவன்
சி.பி.சி.ஐ.டி., அறிக்கையை ஏற்க முடியாது; நீதி விசாரணை ஆணையம் வேண்டும்; திருமாவளவன்
UPDATED : பிப் 10, 2025 03:06 PM
ADDED : பிப் 10, 2025 02:30 PM

சென்னை: 'வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை இறுதியானது அல்ல. நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்', என்று முதல்வரை சந்தித்த வி.சி.க., தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சந்திரகுமாரின் பதவியேற்பு விழாவில் வி.சி.க., எம்.பி., திருமாவளவன் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது: தி.மு.க., பெற்றுள்ள ஓட்டுகள், சமூக நீதிக்கான தேசம் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. ஈ.வெ.ரா.,வை தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதிரானவர் என்ற திரிபுவாத அரசியலை சங்பரிவார் அமைப்புகள் உயர்த்தி பிடித்திருக்கின்றன. ஈ.வெ.ரா., என்ற அடையாளத்தை சிதைத்து விட்டால், திராவிட அரசியலின் வேரை வெட்டி வீழ்த்த முடியும் என்று சங்பரிவார் நம்புகிறது. பண்டிதர் அயோத்தி தாசர், ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோர் காலத்தில் இருந்தே திராவிட அரசியல் இருந்து வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., போட்டியிடாமல் போனதற்கு, சங்பரிவாரின் சூழ்ச்சி தான் காரணம் என்று அறிய முடிகிறது. அவர்கள் எல்லோரும் கூட்டுச் சேர்ந்து, தி.மு.க.,வா? அல்லது தி.மு.க.,வை எதிர்க்கின்ற அரசியல் கட்சியா? என்ற விவாதத்தை நகர்த்தினார்கள். அதில், அவர்கள் வெற்றி பெறவில்லை. அவர்களின் ரகசிய கூட்டணி அம்பலப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர், எனக் கூறினார்.
தொடர்ந்து, முதல்வரிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்ததாகவும் அவர் கூறினார்.
4 கோரிக்கைகள்
* வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை இறுதியானது அல்ல. நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
* பட்டியல் சமூக அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தொடர்பாக சட்டம் இயற்ற வலியுறுத்தல்
* பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வணிக வளாங்கள் கட்டப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. அவற்றில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூக தொழில்முனைவோருக்கு வணிக வளாகங்கள் ஒதுக்க வேண்டும்
* தமிழகத்தில் பெரும் சாதிய வன்கொடுமைகள் பெருகி வருகிறது. அதனை சட்டப்படி தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இவ்வாறு கூறினார்.