போதைப்பொருள் வழக்கு விசாரணையில் சந்தேகம் 3 பேரை விடுதலை செய்து தீர்ப்பு
போதைப்பொருள் வழக்கு விசாரணையில் சந்தேகம் 3 பேரை விடுதலை செய்து தீர்ப்பு
ADDED : நவ 20, 2025 12:16 AM
சென்னை: போதைப்பொருள் விற்ற வழக்கில், போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகம் எழுவதாக தெரிவித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்து உள்ளது.
சென்னை மண்ணடி பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடப்பதாக, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு அக்., 14ம் தேதி, செய்யது அப்துல் காதர், 38, என்பவரிடம் சோதனை செய்ததில், அவரிடம் 6 கிராம், 'மெத் ஆம்பெட்டமைன்' என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், தண்டையார்பேட் டையை சேர்ந்த பாபு, 55, வியாசர் பாடியைச் சேர்ந்த சரவணன், 31, ஆகியோரிடமும் இருந்து, தலா 2 கிராம் அளவுக்கு 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு, சென்னை 2வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன் நடந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், 'பறிமுதலின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் எடை, நீதிமன்றத்தில் தெரிவித்த போதைப் பொருளின் எடை ஆகிய இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்ட விதிகளை போலீசார் பின்பற்றவில்லை என்பது, இதில் தெரிகிறது' என வாதாடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, 'சந்தேகத்துக்கு இடமின்றி, சாட்சிகள் மற்றும் ஆவணங்களுடன், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை. போலீசாரின் விசாரணையில் பல முரண்பாடுகள் உள்ளன. விசாரணை சந்தேகத்தை ஏற்படுத்துவதால், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரையும் விடுதலை செய்கிறேன்' என தீர்ப்பளித்தார்.

