அண்ணா பல்கலை மாணவி: பலாத்கார வழக்கில் 28ல் தீர்ப்பு
அண்ணா பல்கலை மாணவி: பலாத்கார வழக்கில் 28ல் தீர்ப்பு
ADDED : மே 26, 2025 12:31 AM

சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை தொடர்பான வழக்கில், இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும்' என, 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்முறை செய்தார்.
பல்கலை வளாகத்திலேயே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவரை கைது செய்தனர்.
இவர் தி.மு.க., ஆதரவாளராக கூறப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஞானசேகரன் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதற்கிடையே, 'தமிழக போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என, பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், டி.ஜி.பி., தாக்கல் செய்த அறிக்கையில், 'ஞானசேகரன் மீது 35 வழக்குகள் உள்ளன. இவற்றில், ஒன்பது வழக்குகளில் விடுவிக்கப்பட்டு உள்ளார்; ஐந்து வழக்கில் குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
'மற்ற வழக்குகள் இறுதி விசாரணையில் இருப்பதால், ஞானசேகரன் மீதான வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற தேவையில்லை' என்று தெரிவித்தார்.
சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில், பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
அப்போது, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, ஞானசேகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 18 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் ஞானசேகரன் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
கடந்த மார்ச்சில் ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், உடனடியாக சாட்சி விசாரணை துவங்கியது. அரசு தரப்பில் 29 சாட்சியங்களும், 100க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
சாட்சி விசாரணை தினந்தோறும் நடந்து வந்த நிலையில், போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்களை தாக்கல் செய்து வாதாடினார்.
ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. எனவே, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' என்றார்.
இருதரப்பு ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, வாதங்களும் நிறைவடைந்துள்ளன. வரும் 28ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் ஐந்து மாதங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.