தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி நடவடிக்கை எடுக்க வி.எச்.பி., வலியுறுத்தல்
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி நடவடிக்கை எடுக்க வி.எச்.பி., வலியுறுத்தல்
ADDED : நவ 16, 2025 01:45 AM

சென்னை: தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தின் 41வது பொதுக்குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிறுவனர் எஸ்.வேதாந்தம் அறிவுறுத்தலில், மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் நேற்று நடந்தது.
பொதுச்செயலர் சோமசுந்தரம், இணை பொதுச்செயலர் ராமசுப்பு, பொருளாளர் சசிகுமார், செயல் தலைவர் செல்லமுத்து, துணைத் தலைவர் கிரிஜா சேஷாத்ரி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நாட்டை சீர்குலைக்கும் நோக்கத்தில், தலைநகர் டில்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதல், திட்டமிட்ட மிகப்பெரிய வெளிநாட்டு சதி. வரும் காலங்களில், இது போன்ற துயர சம்பவம் நடக்காமல், மத்திய அரசும், மாநில அரசுகளும், எந்த பாகுபாடும் இல்லாமல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பெண்களின் அடிப்படை சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ளது. பாலியல் வன் முறைகள் கட்டுக்கடங்காமல் பெருகி, பெரும் துயரமாக மாறி இருக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை கேள்விக்குறியாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கும் சூழல் நிலவுவதே இதற்கு காரணம். இந்த விஷயத்தில் போலீசார் போதிய கவனம் செலுத்தி, முற்றிலும் ஒழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றும் நம் வழிபாடுகளுக்கு எந்த தடையும் இல்லாதபடி, ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தாமதமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகளாகிறது. ஆனால், சில விஷக் கிருமிகளின் செயலால் முழு பாடலும் ஒலிபரப்பப் படவில்லை. 150 ஆண்டு களுக்கு பின், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய முழுமையான பாடலை பாட வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில், அமைப்பின் செயல்பாடுகள், தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப் பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். அவர் களுக்கு மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆலோசனைகள் வழங்கினார்.
பொதுக்குழுவில் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசும் போது, ''சட்டசபை தேர்தலுக்கு முன், லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஹிந்து எழுச்சி மாநாடு நடக்க இருக்கிறது,'' என்றார்.

