துணைவேந்தர் நியமன அதிகாரம் முதல்வருக்கு மே 3ல் பாராட்டு விழா
துணைவேந்தர் நியமன அதிகாரம் முதல்வருக்கு மே 3ல் பாராட்டு விழா
ADDED : ஏப் 26, 2025 03:11 AM
சென்னை:''பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில முதல்வர்களுக்கு பெற்றுத்தந்த, முதல்வர் ஸ்டாலினுக்கு, மே, 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடக்க உள்ளது,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
பல்கலைகளுக்கு துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, மாநில முதல்வர்களுக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார். முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என, தமிழகத்தில் இருக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், கல்வி சான்றோர்கள், பல்கலை வேந்தர்கள், முதல்வர்கள், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகத்தினர் அனைவரும் ஒன்றுகூடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும், என்னிடமும் கேட்டனர்.
இதை முதல்வரிடம் தெரிவித்து, விழா நடத்த அனுமதி பெற்றுள்ளோம்.
முதல்வருக்கான பாராட்டு விழா, மே, 3ம் தேதி மாலை 4:00 மணிக்கு, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில், நாளை மாலை 5:00 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில், கவர்னருக்கு எதிரான வழக்கில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்கள் முகுல்ரோத்கி, அபிேஷக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடக்க உள்ளது. இதில் முதல்வர் பங்கேற்க உள்ளார்.

