விவசாயிகள் தொழில் முனைவோராக துணை ஜனாதிபதி ஜக்தீப் விருப்பம்
விவசாயிகள் தொழில் முனைவோராக துணை ஜனாதிபதி ஜக்தீப் விருப்பம்
ADDED : ஏப் 28, 2025 02:01 AM

கோவை : ''விவசாயிகள் தொழில்முனைவோராக மாற வேண்டும்,'' என, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 'விக்சித் பாரத்துக்கு வேளாண் கல்வி, புதுமை மற்றும் தொழில்முனைவோரை வளர்த்தல்' என்ற பெயரில், சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
கோவை வேளாண் பல்கலை, இந்திய உணவு உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. உலகளவில் இந்தியா போல, வேறு எந்த நாடும் இல்லை. இந்தியாவின் ஆற்றலே விவசாயம் தான். இன்று நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உள்ளோம்.
கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் விவசாயிகளை அடைய வேண்டும். ஏறக்குறைய, 6,000 விவசாய ஸ்டார்ட் அப்கள் உருவாகியுள்ளன; இது போதாது. விவசாயிகள் தயாரிக்கும் பொருட்களை, மதிப்பு கூட்ட தெரிந்திருக்க வேண்டும். விவசாயிகள் தொழில் முனைவோராக மாற வேண்டும். கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும். பெரிதாக திட்டமிட வேண்டும். அதை அடைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் தமிழ்வேந்தன் வரவேற்றார். தமிழக கவர்னர் ரவி, மாநில மனிதவளத்துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தன்கர், மறைந்த தங்களின் அன்னையர் நினைவாக, 'அம்மாவின் பெயரில் ஒரு மரம்' திட்டத்தின் கீழ், வேளாண்மை பல்கலை வளாகத்தில், மரக்கன்றுகளை நட்டனர்.

