ADDED : ஆக 23, 2025 02:20 AM
சென்னை: 'இண்டி' கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, நாளை தமிழகம் வருகிறார். முதல்வர் ஸ்டாலினையும், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
துணை ஜனாதிபதி தேர்தல், வரும் செப்., 9ல் நடக்கிறது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள, தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், 'இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பது, நம் கடமை' என, கூறியிருந்தார்.
அதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,க்கள், ராஜ்யசபா எம்.பி.,க்களை சந்தித்து ஆதரவு திரட்டவும், நாளை சென்னை வருகிறார், சுதர்சன் ரெட்டி.
நாளை காலை, முதல்வர் ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கிறார். பின்னர், மாலை 4:00 மணிக்கு, தி.நகரில் உள்ள ஹோட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில், தி.மு.க., கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்களை சுதர்சன் ரெட்டி சந்தித்து ஆதரவு கோருகிறார்.