துணை ஜனாதிபதி திருப்பூர் வருகை:பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
துணை ஜனாதிபதி திருப்பூர் வருகை:பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
ADDED : அக் 28, 2025 08:26 PM

திருப்பூர்:துணை ஜனாதிபதியான பின், முதல் முறையாக தனது சொந்த ஊருக்கு இன்று 28ல் வருகை தந்த சி.பி., ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூரை சேர்ந்த சி.பி., ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். சொந்த ஊரான திருப்பூருக்கு இன்று மாலை வந்தார். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள திருப்பூர் குமரன் சிலை மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர் துாவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வருகையொட்டி,, திருப்பூர் மாநகரில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுன. மத்திய சிறப்பு படை பிரிவு, மாநில, மாநகரம் என, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மக்கள் உற்சாகம்
முன்னதாக, திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த சி.பி., ராதாகிருஷ்ணனுக்கு மங்கலம் வாத்தியம் இசைத்து, பூர்ண கும்பம் மரியாதை அளித்தனர். வரவேற்பு அளிக்கும் வகையில் தேசிய கொடியை கையில் ஏந்திய படி பா.ஜ., வினர் மற்றும் மக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் 'பாரத் மாதா கி ஜே' என்ற முழக்கத்தை எழுப்பினர். குமரன் சிலையில் இருந்து வெளியே வந்த துணை ஜனாதிபதி, வெளியில் சுற்றி காத்திருந்த கட்சியினர், மக்களுக்கு நடந்து சென்று, ஒவ்வொருவருக்காக கை, குலுக்கி நன்றி தெரிவித்தார். அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:
''திருப்பூரில் இருந்து ஒருவரை இந்திய தேசத்தின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்று இருப்பது, நம் ஊருக்கும் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் மகத்தான பெருமை. அந்தப் பெருமையை தந்த பிரதமர் மோடிக்கு, நம் ஊரின் சார்பில் மகத்தான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
குமரன் சிலை, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தி விட்டு, டாலர் தோட்டத்துக்கு ஓய்வுக்கு துணை ஜனாதிபதி இன்று இரவு திரும்பினார். நாளை 29ஆம் தேதி அதிகாலை, சந்திராபுரத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கும் மற்றும் முத்துாரில் உள்ள, ஐந்து கோவில்களுக்கு செல்ல உள்ளார். தரிசனம் முடித்த பின், செரீப் காலனியில் உள்ள வீட்டில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடக்கும் பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், மதுரைக்கு கிளம்பி செல்ல உள்ளார்.

