போலீசார் முறையாக விசாரிக்காவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்காது: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
போலீசார் முறையாக விசாரிக்காவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்காது: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ADDED : நவ 01, 2024 05:02 AM

மதுரை : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கமலா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
என் கணவர் கொத்தனாராக வேலை செய்தார். வத்தலக்குண்டு- நிலக்கோட்டை மெயின் ரோட்டில் பிப்., 7ல் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிந்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் அடையாளம் காணவில்லை. சம்பவயிடம் அருகே ஒரு நிறுவனம் மற்றும் டோல்கேட்டில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
இவற்றில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தால் வாகனத்தை அடையாளம் காண முடியும். சரி பார்க்க போலீசார் முயற்சிக்கவில்லை. விசாரணையை விரைவுபடுத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு தரப்பு: அப்பகுதியில் பல நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தும் பயனில்லை. எந்த விபரங்களையும் பெற முடியவில்லை. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: டிரைவரின் அலட்சியத்தால் மனுதாரரின் கணவர் மரணம் அடைந்தார். அவ்வாகனத்தை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை. குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அரசை சார்ந்து இருக்கின்றனர். போலீசார் உரிய முறையில் விசாரணை செய்யவில்லை எனில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்காமல் போகலாம்.
உண்மையைக் கண்டறிய, போலீசாருடன் சேர்ந்து விசாரணை நடத்த புகார்தாரரான மனுதாரரை அனுமதிக்கலாம் என, இந்நீதிமன்றம் நினைத்தது. மனுதாரர் ஒரு இளம் விதவை.
அவருக்கு இரு குழந்தைகள் உள்ளதை கருத்தில் கொண்டு, அத்தகைய உத்தரவு பிறப்பிப்பதை இந்நீதிமன்றம் தவிர்க்கிறது.
பொறுப்பை உணர்ந்து, குற்றவாளிகளை கண்டறிய போலீசார் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்நீதிமன்றம் தானாக முன்வந்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.,யை ஒரு எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்கிறது.
அவர் தற்போதைய விசாரணை அதிகாரி அல்லது வேறொரு நேர்மையான அதிகாரியிடம் விசாரணையை ஒப்படைப்பதன் வாயிலாக வாகனத்தை அடையாளம் காண வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கை துவங்கப்படுவதை எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

