மலைப்பாம்புடன் வீடியோ: டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறை சோதனை
மலைப்பாம்புடன் வீடியோ: டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறை சோதனை
UPDATED : ஜன 02, 2025 05:20 PM
ADDED : ஜன 02, 2025 05:14 PM

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள டி.டி.எப். வாசன் வீட்டில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யூடியூப் புகழ் டி.டி. எப். வாசன். இவர் பைக்கை வேகமாக ஓட்டி அந்த வீடியோவை, யூடியூப்பில் வெளியிடுவார். பைக்கை வேகமாக ஓட்டி சாகசம் செய்து சர்சையில் சிக்கினார். அதே போல் அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் டி.டி.எப். வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த வீடியோவில் தான் அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.இதையடுத்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, டி.டி.எப்.வாசனின் வீடு காரமடை வெள்ளியங்காட்டில் இருப்பதால். அவர் வீட்டிற்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் இன்று நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், டி.டி.எப். வாசன் வீட்டில் சோதனை செய்தோம். அப்போது அவர் வீட்டில் வனத்துறையால் வளர்க்க தடை செய்யப்பட்ட விலங்குகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்து சோதனை செய்தோம். ஆனால் இங்கு விலங்குகள் எதுவும் இல்லை. இது தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்,' என்றார்.

