நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினரை நேரில் அழைத்து விஜய் இன்று ஆறுதல்
நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினரை நேரில் அழைத்து விஜய் இன்று ஆறுதல்
ADDED : அக் 27, 2025 12:43 AM

மாமல்லபுரம்: கரூர் த.வெ.க., கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சித் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று ஆறுதல் கூறுகிறார்.
த.வெ.க., கட்சித் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் பிரசாரம் செய்தார். கடந்த செப்., 27ம் தேதி, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
கரூரில் நடந்த பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர் .
இறந்தவர்களின் குடும்பத்தினரை, விஜய் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. அதற்காக அவர் முயன்றதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இச்சூழலில், இறந்த வர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயின்ட் தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து, அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவெடுத்து, அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் , மாமல்லபுரத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.
ஹோட்டலில் இன்று காலை 10:00 முதல், பிற்பகல் 2:00 மணி வரை நடக்கும் நிகழ்வில், விஜய் பங்கேற்று ஆறுதல் கூற உள்ளதாக த.வெ.க., தரப்பில் கூறினர்.

