கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அரங்கத்துக்கு அழைத்து வந்து பேச விஜய் முடிவு
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அரங்கத்துக்கு அழைத்து வந்து பேச விஜய் முடிவு
ADDED : அக் 13, 2025 01:14 AM

சென்னை: கரூர் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை, அரங்கத்தில் வைத்து, மொத்தமாக சந்திக்க, த.வெ.க., தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், கடந்த மாதம் த.வெ.க., தலைவர் விஜய், பிரசாரத்தில் ஈடுபட்டபோது, நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
பிரசாரத்தை முடித்த விஜய், அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தார். இச்சம்பவத்திற்கு பின், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
அறிவுறுத்தல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், வீடியோ காலில் பேசி, ஆறுதல் கூறினார். கரூர் செல்வதற்கு அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என விஜய் தரப்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு, கரூர் எஸ்.பி.,யை அணுகும்படி, அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க, கரூர் செல்லும் விஜய்க்கு, உரிய பாதுகாப்பு வழங்க, மாவட்ட போலீசாரிடம் அனுமதி பெற, முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை, விஜய் சந்திப்பதற்கான திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை, தனித்தனியாக சந்தித்து பேச, விஜய் விரும்புகிறார்.
இதற்காக, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு; காயம் அடைந்து, உடல் நலம் தேறியவர்களுடன் சந்திப்பு என, இரண்டு வகையான சந்திப்புகளை நடத்த, விஜய் முடி வெடுத்துள்ளார்.
உயிரிழந்தோர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று, குடும்பத்தினருக்கு தனித்தனியாக ஆறுதல் சொல்லவும், நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை சந்திக்கவும் விஜய் விரும்பினார்.
தன்னிச்சையாக கரூர் செல்லும் போது, ஏதேனும் பிரச்னை ஏற்படலாம் என்பதால், உரிய அனுமதியை பெற டி.ஜி.பி.,யை அணுகினார்.
ஆனால், மாவட்ட எஸ்.பி.,யை அணுகுமாறு டி.ஜி.பி., அலுவலகத்தில் கூறிவிட்டதால், மாவட்ட எஸ்.பி.,யிடம் போலீஸ் அனுமதி கோரப்பட்டது.
இதையடுத்து, 'பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்கு தனித்தனியாக செல்லும்போது, விஜயை பார்க்க, ரசிகர்களும் கட்சியினரும் பெரிய அளவில் திரளுவர். அதை தவிர்க்கும் விதமாக ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்' என, த.வெ.க.,வினருக்கு போலீசார் அறிவுரை கூறினர்.
சந்திக்க திட்டம் இதை ஏற்ற விஜய், தனித்தனியாக ஒவ்வொருவர் வீடுகளுக்கும் செல்லாமல், ஓரிடத்துக்கு எல்லோரையும் வரவழைத்து, அவர்களை பார்த்து ஆறுதல் கூறலாம் என சொல்லி உள்ளார்.
முதல் கட்டமாக வரும் 17ம் தேதி கரூர் செல்லும் விஜய், கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் இருக்கும் அட்லஸ் அரங்கில் வைத்து, கரூர் கூட்டத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்தினரை சந்திக்கும் நிகழ்வை நடத்த திட்டமிடப்ப ட்டு உள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை, த.வெ.க., கொள்கை பரப்புச்செயலர் அருண்ராஜ், கரூரில் இருந்தபடியே மேற்கொண்டு வருகிறார்.
அடுத்த கட்டமாக, கரூரில் ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில், இதே மாதிரியான ஒரு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், நெரிசலில் சிக்கி காயமடைந்து, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியோரை விஜய் சந்திக்க திட்டமிடப்பட்டுஉள்ளது.
இந்த கூட்டங்களுக்கு, இறந்தோர் சார்பாக அல்லது சிகிச்சைக்குப்பின் மீண்டோர் ஒவ்வொருவருடனும், அவர்களின் குடும்பத்திலிருந்து ஐந்து பேரை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.