விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால் வி.சி.,க்கள் இன்ஆர்கானிக் மாஸா? விழுப்புரத்தில் கொந்தளித்த திருமாவளவன்
விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால் வி.சி.,க்கள் இன்ஆர்கானிக் மாஸா? விழுப்புரத்தில் கொந்தளித்த திருமாவளவன்
UPDATED : நவ 10, 2024 08:06 AM
ADDED : நவ 10, 2024 01:41 AM

விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
விஜயகாந்த் கட்சி துவங்கி, பெரிதாக பேசப்பட்டபோது என்ன சொன்னார்கள் தெரியுமா? 'இப்படித்தான், ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி துவங்கினர்; அவர்களெல்லாம் கொஞ்ச நாட்களிலேயே காணாமல் போய்விட்டனர்.
அதுபோன்ற நிலைதான் விஜயகாந்துக்கும் ஏற்படும்' என்று சொன்னார்கள். ஆனால், அவர் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வரை வந்தார்.
இப்போது, நடிகர் விஜய் கட்சி துவங்கி இருக்கிறார். அவருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அவர் நடத்திய மாநாட்டுக்கு இத்தனை லட்சம் பேர் வந்தனர்; அத்தனை லட்சம் பேர் வந்தனர் என வியந்து வியந்து செய்தி போடுகின்றனர்; பேசுகின்றனர்.
வி.சி.,க்கள் சார்பிலும் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது.
2 லட்சம் பெண்கள்
அதற்கு எத்தனை லட்சம் பேர் வந்தனர் தெரியுமா? இத்தனைக்கும் திருமாவளவன் சினிமா ஹீரோ இல்லை. விஜய் 'ஆர்கானிக் மாஸ்' என்கின்றனர். அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, 'இன்ஆர்கானிக் மாஸா?'
எங்கள் மாநாட்டுக்கு ஆட்களை கூட்டி வரவில்லை. யாருக்கும் பணம் கொடுக்கவில்லை; பிரியாணி கொடுக்கவில்லை. ஆனால், உணர்வோடு குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு மாநாட்டுக்கு வந்தனர். மற்ற மாநாடுகளைக் காட்டிலும் இதுதானே சிறந்த மாநாடு?
இன்றைக்கு சொல்கிறேன். மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், அதையெல்லாம் யாரும் வியந்து பேசவில்லை; பெயருக்குக் கூட விவாதிக்கவில்லை.
வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து, இனி திருமாவளவன் தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என, யாரும் விவாதப் பொருளாக்கவில்லை.
திருமாவளவன் தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என பேசவில்லை. யாரும் பேச மாட்டார்கள். அது குறித்து இந்த திருமா, ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. எல்லாரும், வி.சி.,க்களை குறைத்து மதிப்பிட்டு, சிறுமைப்படுத்த பார்க்கின்றனர்.
ஆசை காட்டினால், இருக்கும் கூட்டணியை விட்டு திருமா வெளியேறி வந்து விடுவார் என நினைக்கின்றனர்; இது தவறு. எத்தனை பேர் புதிது புதிதாக அரசியலுக்கு வந்தாலும், அவர்களெல்லாம் வி.சி.,க்களுக்கு போட்டியாக இருக்க முடியாது.
அவசரப்படக்கூடாது
சமூக ஊடகங்கள் மோசமானவை; அவற்றில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். எதிலும் அவசரப்படக்கூடாது.
விஜய் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தினரை திரும்பத் திரும்ப காட்டிய, 'விஷுவல் மீடியா'க்கள், நம் மாநாட்டுக்கு அப்படியொரு, 'கவரேஜ்' வழங்கவில்லையே ஏன்?
வி.சி.,க்களை குறைத்து மதிப்பிடுவதுதான் காரணம்; அந்நிலை விரைவில் மாறும்.
புதிதாக கட்சி துவங்கி இருப்போர் என்னை புரிந்து கொள்ளவே, 10 ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்
- நமது நிருபர் -.