பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கவர்னரிடம் விஜய் வலியுறுத்தல்
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கவர்னரிடம் விஜய் வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2024 11:55 PM

சென்னை : தமிழக கவர்னர் ரவியை, த.வெ.க., தலைவர் விஜய் நேற்று சந்தித்து, 'அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மதியம் சென்னை கிண்டி ராஜ்பவனில், கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். அப்போது, கவர்னருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். பாரதியார் கவிதை தொகுப்பு புத்தகங்களை, விஜய்க்கு கவர்னர் வழங்கினார்.
தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக, பல்வேறு சம்பவங்கள் குறித்து பட்டியலிட்டு, கவர்னரிடம் விஜய் எடுத்துரைத்தார். அதை கவர்னர் குறித்துக் கொண்டார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்திற்கு, உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விஜய் வலியுறுத்தினார். இந்த சந்திப்பு, 15 நிமிடங்கள் நீடித்தது.
சந்திப்பின் போது, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடன் இருந்தனர்.
பின்னர், ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: விஜய் தலைமையில் கவர்னர் ரவியை சந்தித்து மனு அளித்தோம். 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனுவில் வலியுறுத்தி உள்ளோம்.
தமிழகம் முழுதும் சமீபத்தில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்க வலியுறுத்தினோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.