ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு: தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு: தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2025 01:26 AM
சென்னை: 'ஜாதிவாரி கணக்கெடுப்பின் வாயிலாக, உண்மையான சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என, த.வெ.க., தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
நாடு முழுதும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமூக நீதி
தமிழகத்தில் 2027 மார்ச் 1ம் தேதியை அடிப்படையாக வைத்து, கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண் துடைப்புக்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கூடாது.
அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு, முறையாக கிடைக்கும் வகையில் நடத்த வேண்டும். அதற்காக அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய ஒரு ஆணையம் அல்லது குழுவை அமைக்க வேண்டும்.
உரிய தரவுகள் முறையாகவும், முழுமையாகவும் இருக்கும் வகையில், குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயம் செய்து, மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
லோக்சபா தொகுதிகளுக்காக, மறு சீரமைப்பை நோக்கமாக வைத்து, இந்த கணக்கெடுப்பை நடத்தக்கூடாது. இந்த கணக்கெடுப்பின் வாயிலாக, உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
தமிழக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும். அந்த ஆய்வானது, அனைத்து சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தையும், சட்டப்படி செல்லத்தக்க, உள் ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையிலான தரவுகளை, முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
மறக்கக்கூடாது
இதை செய்யாமல், மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை என, மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் தி.மு.க., அரசு, பா.ஜ., முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு, சமூக அநீதிக்கு துணை போகக்கூடாது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாவிட்டால், அதற்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.