ஜெயலலிதா, பழனிசாமி படங்களையும் அடுத்த மாநாட்டில் விஜய் வைப்பார்: சீமான்
ஜெயலலிதா, பழனிசாமி படங்களையும் அடுத்த மாநாட்டில் விஜய் வைப்பார்: சீமான்
UPDATED : ஆக 22, 2025 10:32 AM
ADDED : ஆக 22, 2025 02:30 AM
சென்னை: ''புதிதாக ஒரு நிலைப்பாடு எடுத்தால், அதில் உறுதியாக நிற்க வேண்டும். பழைய அரசியலையே எடுத்துக் கொண்டு வருவதற்கு, புதிதாக ஒரு கட்சி தேவையில்லை,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தேர்தலில் போட்டியிட்டு வென்று, மக்களின் பிரதிநிதியாக அமைச்சர், முதல்வர் என பதவிக்கு வருவோர், குற்றச் செயல்களில் ஈடுபட்டால், பதவி நீக்கம் செய்வது என்பது ஏற்புடையது தான்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இது போன்ற சட்டம் இல்லையெனில், ஊழல், லஞ்சம் போன்றவற்றை யாராலும் தடுக்க முடியாமல் போகும்.
இது போல, தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர், அடுத்த 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கக்கூடாது என்ற சட்டத்தையும் கொண்டு வர வேண்டும்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காவது, 'கட் அவுட், பேனர்' வைத்த பின், அவற்றை அகற்றச் சொல்கின்றனர். எங்களையெல்லாம் வைக்க விடாமலே தடுக்கின்றனர்.
புதிதாக கட்சி துவங்கி நடத்துபவருக்கு, தி.மு.க.,வை ஒழிப்பது மட்டுமே லட்சியமாக இருக்கக் கூடாது. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதை பற்றி தான் சொல்ல வேண்டும்.
விஜய் அடுத்த மாநாடு நடத்தும்போது, ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் படங்களையும் போடுவார் போல தெரிகிறது.
தமிழகத்தில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் துவங்கி வைத்த அரசியல் தான், 60 ஆண்டுகளாக இருக்கிறது. நேரத்துக்கு ஏற்றாற்போல் செயல்படுவது ஏற்புடையது அல்ல.
புதிதாக ஒரு நிலைப்பாடு எடுத்தால், அதில் உறுதியாக நிற்க வேண்டும். பழைய அரசியலை எடுத்துக் கொண்டு வருவதற்கு, புதிதாக ஒரு கட்சி தேவையில்லை.
ஆட்சியில் உள்ள கட்சியில், எது சரியில்லை என்பதை தெளிவாக கூற வேண்டும். ஒட்டுமொத்தமாக சரியில்லை என்பதை, ஒரு பைத்தியக்காரன் கூட சொல்லி விடுவான்.
வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்றால், முதலில் காங்கிரசையும், ஊழல் என்றால் தி.மு.க.,வையும் பற்றி தான் விஜய் பேச வேண்டும்.
ஒரு பக்கம் மயில் இறகால் தடவுவது, மற்றொரு பக்கம் கம்பால் அடிப்பது போன்று விஜய் செயல்படுவது, சரியான வழிகாட்டுதல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மது கடைகளை திறந்து போதையை ஒழிப்பதா?
சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகத்துக்கு என்ன செய்தார் என கேட்கும் தி.மு.க., - எம்.பி., கனி மொழி, 'மத்திய அரசு நடத்திய 'ஆப்பரேஷன் சிந்துாரை' ஆதரித்து வெளிநாடுகளுக்கு இந்திய அரசு பிரதிநிதியாக சென்றபோது, 'தமிழுக்கும், தமிழருக்கும் பா.ஜ., என்ன செய்தது?' என ஏன் கேட்கவில்லை? திராவிடம் என்பது சமஸ்கிருத சொல். மாடல் என்பது ஆங்கில சொல். இது இரண்டையும் இணைத்து வைத்துதான், பித்தலாட்டம் செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளனர். அதற்காக சட்டம் கொண்டு வந்துள்ளனர். அதை மனதார வரவேற்கிறேன். தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு, தமிழக அரசு போதையை ஒழிப்பேன் என கூறினால், அதை நம்ப வேண்டுமா? குடிசை ஒழிப்பு என்று கூறி, குடிசைகளை கொளுத்தி விடுவது மாதிரி, மது ஒழிப்பு எனக் கூறி, மதுவை குடித்து விட்டுத் தான் ஒழிக்க முடியுமா? -சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்