த.வெ.க., மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்; போலீசின் 42 கேள்விகளுக்கு பதில்
த.வெ.க., மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்; போலீசின் 42 கேள்விகளுக்கு பதில்
ADDED : ஆக 09, 2025 07:26 AM

மதுரை : 'தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், கட்சி தலைவரான விஜய் மட்டுமே பேசுவார் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பாரபத்தி பகுதியில் த.ெவ.க., மாநாடு நடத்தப்படுகிறது. வரும் 21ம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
இதற்கிடையே, மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, போலீஸ் தரப்பில் 42 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு, கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் நேற்று பதிலளித்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஆக., 21 மதியம் 3:15 முதல் இரவு 7:00 மணி வரை மாநாடு நடைபெறும்.
த.வெ.க., மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் தவிர, வேறு முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை; அவர் மட்டுமே பேசுவார். மதுரை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடக்கும் இடம் வரை, அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது.
மாநாட்டில் கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. ௧.50 லட்சம் பேர் வரை பங்கேற்பர். மூன்று இடங்களில் 'பார்க்கிங்' வசதி செய்யப்படுகிறது. தொண்டர்கள் வந்து செல்ல 18 வழிகள் அமைக்கப் படுகின்றன.
மாநாடு பகுதி முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு கூறப் பட்டுள்ளது.