ADDED : ஜூலை 21, 2025 12:49 AM

முதுகுளத்துார்: ''நடிகர் ரஜினி, கவர்னராக பொறுப்பேற்க வாய்ப்பு வந்தது. அதை அவர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்,'' என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம், வளநாடு கிராமத்தில், கரும்பிள்ளை மடம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பரிகார ஹோமம் நடந்தது. இதில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் பங்கேற்றார்.
பின், அவர் கூறியதாவது:
தமிழக அரசியலில், புதிதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சி துவங்கி, வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள நடிகர் விஜய், ஜெயிப்பது கடினம். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை புத்திசாலி; அவர் நன்றாக வருவார். வரும் காலங்களில், தமிழக அரசியலில் மிகப்பெரிய இலக்கை அண்ணாமலை அடைவார். அவருக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் உள்ளது.
கவர்னராக பொறுப்பேற்குமாறு, ரஜினிக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அதை அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதே போல, எம்.பி.,யாகவும் வாய்ப்பு வந்தது. அதையும் அவர் மறுத்து விட்டார். பதவிகளுக்கு ஆசைப்படாதவர்தான் ரஜினி. இது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.