விஜயகாந்த் மைத்துனர் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி: 'பில்டர்' கைது
விஜயகாந்த் மைத்துனர் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி: 'பில்டர்' கைது
ADDED : பிப் 23, 2024 01:47 AM

சென்னை: மறைந்த நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான இடத்தில், அடுக்குமாடி வீடு கட்டி தருவதாக கூறி, 43 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் மேலாளரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
மத்திய குற்றப்பிரிவில், பூர்ணஜோதி அளித்துள்ள புகார்:
சென்னை மாதவரம் 200 அடி சாலையில், எனக்கு சொந்தமான, 2.10 ஏக்கர் காலியிடத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய முடிவு செய்தேன்.
அதற்காக சந்தோஷ் சர்மா என்பவரின், 'லோகா டெவலப்பர்' என்ற கட்டுமான நிறுவனத்துடன், 2014ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கட்டப்படும், 234 அடுக்குமாடி குடியிருப்புகளில், 78 வீடுகளை நிலத்தின் உரிமையாளரான எனக்கு தர வேண்டும்; 156 வீடுகளை மேற்படி நிறுவனம் எடுத்துக்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், எனக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளில், 48 வீடுகளை எனக்கு தெரியாமல், என் கையெழுத்தை போலியாக போட்டு விற்று, 43 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா, மேலாளர் சாகர் ஆகியோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா, 44, மேலாளர் சாகர், 33 ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.