கட்சி பெயர், கொடி, சின்னத்திற்கு விஜய் கொடுத்த விளக்கம்
கட்சி பெயர், கொடி, சின்னத்திற்கு விஜய் கொடுத்த விளக்கம்
UPDATED : அக் 27, 2024 08:48 PM
ADDED : அக் 27, 2024 08:32 PM

விக்கிரவாண்டி: த.வெ.க., பெயர், கொடி நிறம், அதில் உள்ள யானை சின்னம் ஆகியவை எதை குறிக்கிறது என்பது குறித்து அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் விளக்கம் கொடுத்துள்ளார்.
விக்கிரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில், இதற்கான விளக்கம் குறித்து வீடியோ விஜய் குரலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளதாவது:
வெற்றி
வெற்றி என்பது நினைத்ததை மிச்சம் மீதி இல்லாமல் செய்து முடிப்பது. மனதிற்குள் இருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவது, வாகை சூடுவது என பல அர்த்தம் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு வார்த்தை தான் நமது கட்சியின் மையச் சொல் ஆகவும் மந்திரச் சொல் ஆகவும் மாறி உள்ளது.
தமிழகம்
கட்சியின் முதல் சொல் தமிழகம். இது மக்களுக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் சொல்வது போன்று ஒரு வார்த்தை இருக்க வேண்டும் என முடிவு செய்து தேர்வு செய்தது தான் இந்த வார்த்தை. தமிழகம் என்றால், தமிழர்களின் அகம், தமிழர்கள் வாழும் இடம் என சொல்லலாம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து என நமது பல இலக்கியங்களில் இடம்பிடித்த ஒரு வார்த்தைதான் தமிழகம் என நமக்கு சொல்லி கொடுத்துள்ளனர்.
கழகம்
கட்சி பெயரின் 3வது வார்த்தை கழகம். கழகம் என்றால் படை பயிலும் இடம் என அர்த்தம் உள்ளது. அந்த வகையில் நமது இளம் சிங்கங்கள் பயிலும் இடம் தான் நமது கட்சி நமது கழகம். இதனால் கழகம் என்பது சரியாக பொருந்தி உள்ளது
கட்சி நிறம்
கட்சி கொடியின் மேலும், கீழும் இருப்பது அடர் ரத்த சிவப்பு நிறம். மெரூன் நிறம். சிவப்பு நிறம் புரட்சியின் குறியீடு. அந்த வகையில் மெரூன் நிறம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். கட்டுப்பாட்டை குறிக்கும். பொறுப்புணர்வு, சிந்தனை திறனை, செயல் தீவிரத்தை சொல்லும் நிறம்.
மஞ்சள் நிறம்
மையத்தில் உள்ள மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, நம்பிக்கை, லட்சியம், மனத்தெளிவு, உற்சாகம், ஆற்றல், நினைவாற்றால் ஆகியவற்றை தூண்டுவதுடன் இலக்கை நோக்கி உறுதியுடன் ஓட வைக்கும். இதனை மனதில் வைத்து தான் இந்த நிறத்தை கொண்டு வந்துள்ளோம்
வாகைப்பூ
வாகை என்றால் வெற்றி என ஒரு அர்த்தம் உள்ளது. அரச வாகை என்றால் அரசனுடயை வெற்றி என அர்த்தம். த.வெ.க., கொடியில் இருக்கும் வாகை மக்கள் வாகை. மக்களுக்கான வெற்றி. தமிழக மக்கள், உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் நேர்கோட்டு சித்தாந்தத்தில் பயணிக்க வைத்து வெற்றி வாகை சூட வைப்பதற்கான உறுதிப்பாட்டை குறிக்க தான் வாகை பூவை வைத்து உள்ளோம்.
யானை
மிகப்பெரிய பலத்தை சொல்வது என்றால் யானை பலம் எனக் கூறுவார்கள். நிறத்திலும், குணத்திலும் உயரத்திலும் உருவத்திலும் தனித்தன்மை கொண்டது. போர் யானை தன்னிகரற்றது. போர் தந்திரம் பழகிய யானை எதிரிகளின் தடைகளை படைகளை சுற்றி வளைத்து துவம்சம் செய்வதில் கில்லாடி.போர் முனையில் இருக்கும் இரட்டை யானைகள் தான் கொடியில் உள்ளது. இந்த இரட்டை போர் யானைகள் எவ்வளவு மதம் பிடித்த யானையையும் கட்டுப்படுத்தி வழிக்கு கொண்டு வரும் வல்லமை பெற்ற கும்கி யானை போன்றது. இந்த இரட்டை யானை எதை குறிக்கிறது என்பது புரிய வேண்டியவர்களுக்கு சரியாக புரியும்.
நட்சத்திரங்கள்
கொடியில் இருக்கும் வாகை பூவை சுற்றி நாம் வென்று எடுக்க வேண்டிய நமது செயல்திட்டங்களை சொல்வது போன்று 28 நட்சத்திரங்கள் உள்ளது. அவை பச்சை நீல வண்ணத்தில் உள்ளது. இது நாம் கட்டமைக்க போகும் சமூக நல்லிணக்கத்தை குறிக்கும்
தலைவர்கள்
கட்சி துவக்கியதற்காக தான் பின்பற்றும் தலைவர்களையும் அதற்கான காரணத்தையும் விஜய் விளக்கி உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: அரசியல் பயணத்திற்கு யாரை துணையாக வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்பதில் தெளிவும் புரிதலும் தேவை. அப்படி தேர்வு செய்தவர்கள் தான் ஈ.வெ.ரா., காமராஜர், அம்பேத்கர், ராணி வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஈவெரா
ஈ.வெ.ரா., என்றால் கடவுள் மறுப்பு கொள்கை என்ற பிம்பத்தை கட்டமைத்து உள்ளனர். நாங்கள் யாரின் கடவுள் நம்பிக்கையை உதாசீனப்படுத்த மாட்டோம். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என தெளிவாக அறிவிக்கிறோம்.சர்வ மத பாதுகாப்புக்கும் சமய நம்பிக்கைகளுக்கும் அரணாக இருப்பது தான் எங்களது சமரசமற்ற அடிப்படை ஆழமான நிலைப்பாடு. பெண் கல்வி, பெண் முன்னேற்றம், பெண் விடுதலை சமுதாய சீர்திருத்தம், சமூக நீதி என்ற காரணத்திற்காக அவரை வழிகாட்டியாக ஏற்க முடிவு செய்தோம்.
காமராஜர்
கல்விக்காகவும், தொழில் வளர்ச்சிக்கு அந்த காலத்தில் யோசித்தவர் காமராஜர். நேர்மையான நீதிநிர்வாக செயல் திறனுக்கு ஒற்றை உதாரணமாக நிற்பது காமராஜர் மட்டுமே. அதனால் நமது நிர்வாக செயல்முறை சித்தாந்தத்திற்கான சிற்பி வழிகாட்டியாக அவரை தேர்வு செய்தோம்.
அம்பேத்கர்
சமூக நீதி, சம நீதி, சம வாய்ப்பு வகுப்பு வாத பிரதிநிதித்துவம் அனைத்தையும் செயலில் சுமந்து நின்ற அவரை எங்களின் கொள்கை வழிகாட்டி தலைவராக ஏற்பதை இன்முகத்துடன் அறிவிக்கிறோம்
வேலு நாச்சியார்
தனது கணவரை இழந்த பிறகும் வீட்டிற்குள் முடங்காமல் வாளேந்தி வேல் ஏந்தியும் மண்ணை காக்க போர்க்களம் புகுந்த வீர புரட்சியாளர். இந்தியாவின் முதல் விடுதலை பெண் போராளி. நாடாண்ட தமிழச்சி. எதிரி எவ்வளவு பெரிய ஆள ஆக இருந்தாலும் சரியான நேரம் பார்த்து இறங்கி அடித்தால் யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம் என சொன்னதுதான் அவரது வாழ்க்கை. அந்த காலத்தில் அனைத்து தரப்பினருடன் சுமூகமாக இருந்தவர்.
கடலூரை சேர்ந்த அஞ்சலை
நிறைமாத கர்ப்பணியாக இருந்த போதும் யோசிக்காமல் பயமில்லாமல் போராட்டத்தில் கைதாகி சிறை சென்று பரோலில் வந்து குழந்தை பெற்று குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறை சென்ற சூப்பர் லேடி அஞ்சலை அம்மாள்.மகாத்மா காந்தி, பாரதியாரின் பாராட்டை பெற்றவர். பெண்களை கொள்கை தலைவராக எந்த அரசியல் இயக்கமும் அறிவித்தது இல்லை. அதில் முதல்முறையாக முத்திரை பதித்தது த.வெ.க.,
இவ்வாறு அந்த வீடியோவில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.