விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ., தி.மு.க.,வில் ஐக்கியம்
விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ., தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : டிச 12, 2025 05:23 AM
சென்னை: விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ., செல்வகுமார் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார்.
விஜயிடம் பி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி, விஜய் நடித்த, 'புலி' படத்தை தயாரித்தவர் பி.டி.செல்வகுமார். இவர் தலைமையில் 100 பேர், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நேற்று தி.மு.க., வில் இணைந்தனர்.
பின், பி.டி.செல்வகுமார் அளித்த பேட்டி:
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளுக்கு கட்டடம், போன்றவற்றை கட்டி கொடுக்கிறோம். தனி இயக்கமாக இருந்து, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், தி.மு.க.,வில் இணைந்துள்ளோம்.
விஜய் மக்கள் இயக்கமாக தன்னுடைய ரசிகர் மன்றத்தை நடத்தியபோது, ஒரு துாணாக இருந்தேன். விஜயுடன் ஆரம்ப காலத்தில் இருந்து, தியாகம் செய்தவர்கள் யாரும், அவருடன் இப்போது இல்லை. விஜய் ஒரு நிலவு. ஆனால், அவர் அமாவாசையாகதான் மாற முடியும்.
விஜய் அவரது தந்தைக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஒரு நடிகையை பார்ப்பதற்கு, கூலித் தொழிலாளர்கள், ரசிகர்கள் அனைவரும் வருவர். விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் புரட்சியாளர்கள் என்றோ, அனைவரும் விஜய்க்கு ஓட்டளிப்பர் என்றோ, கனவில் கூட நினைக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

